ஆளுநரிடம் இருந்து அற்புதம்மாளுக்கு கிடைத்த முக்கிய செய்தி! பேரறிவாளனின் விடுதலை விவகாரம்!

0
299

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்தார்.

இதன்போது 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநருடனான சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த அற்புதம்மாள்,

“பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தேன். அந்த மனுவில் நீதிபதி கே.டி. தாமஸின் தீர்ப்பு விவரத்தையும் இணைத்திருக்கிறேன்.

எனது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்தும் விளக்கினேன்.

அதனை ஆளுநர் கனிவுடன் கேட்டார். மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். எனவே அமைச்சரவை பரிந்துரையை உடனடியாக பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது” என்று அற்புதம்மாள் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு 26 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை, அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் 7 பேரின் விடுதலை தாமதமாகி கொண்டே வருகிறது.

இந்த நிலையிலேயே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: