ஆடி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் அதிகமாக இப்படித்தான் நடந்துகுவீங்க‌!

0
1112

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை ஆடி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த ராசி சந்திரனுக்கு சொந்த ஆட்சி வீடாகும். இந்த ராசியில் குருபகவான் உச்ச அமைப்பை பெறுகிறார்.

செவ்வாய் நீச்சம் அடைகின்றார். ஜலராசி என்ற அமைப்பை பெற்ற இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.

இவர்களை ஓர் அனுபவச் சுரங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மனம் ஓர் ஆழ்கடலுக்கு ஒப்பாகும். சதா எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். கடிந்து பேசினாலும், தூற்றினாலும், வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன், நேரடியாக ரியாக்ட் செய்யமாட்டார்கள்.

ஆனால் சமய சந்தர்ப்பம் வாய்க்கும்போது எல்லாவற்றிற்கும் சேர்த்து பழி தீர்த்துக் கொள்வார்கள். நண்டைப் போல் பிடித்த பிடியாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். எங்கு பதுங்க வேண்டுமோ அங்கு பதுங்கி, எங்கு பாய வேண்டுமோ அங்கு பாய்வார்கள்.

ஞாபக சக்தி அதிகம் உடையவர்கள் யானையைப்போல் நினைவாற்றல் மிக்கவர்கள். யானைக்கு சாந்தமும், மூர்க்கமும் கலந்த இயல்பு உண்டு. இவர்களும் யானையைப் போலவே செயல்படுவார்கள். இவர்களில் பலருக்கு உடல்வாகு சற்று கனத்த சரீரமாகவே இருக்கும்.

தங்களின் வயதை விட வயோதிகராக காட்சியளிக்கும் தன்மையுடையவர்கள். சோதனை காலங்களில் வேதனை அடைய மாட்டார்கள். மனச்சஞ்சலம், சலனம் ஏற்பட்டாலும் எப்பாடுபட்டாவது தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

கற்பனை வளம் ஊற்றெடுக்கும். கதை, கவிதை, காவியம், பாடல்கள் புனைவதில் இயற்கையான ஞானம் பெற்றிருப்பார்கள். எல்லாமே அதீதமாக இருக்கும். மற்றவர்களால் எளிதில் செய்ய முடியாத விவகாரங்களை மிகச் சாதுர்யமாக சாதித்துக் காட்டுவார்கள். எப்பொழுதும் சிந்தனை வயப்பட்டவர்களாகவும், சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள்.

புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள். இவர்களை பற்றி உயர்வாக, மதிப்பாக பேசினால் எந்த சலுகையையும் சுலபமாக பெற்று விடலாம். சிறுவயதில் தகாத நட்பினால் சில இடையூறுகள் வர வாய்ப்புள்ளது. தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும்.

எந்த ஒரு விஷயத்தையும் பார்த்தவுடனே கிரகித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். சிலநேரங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்தபந்தங்கள், நண்பர்களிடையே மனக்கசப்பு உண்டாகும். அடிக்கடி குணத்தையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்வார்கள். சந்தேகமும் இவர்களின் உடன்பிறந்த ஒன்றாகும்.

பிடிவாதமும் கலந்திருக்கும். சாப்பாட்டு பிரியர்கள். சுவையான, சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தங்கள் சொந்த லாபத்துக்கு எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

தனம் குடும்பம் வாக்கு
குடும்பம், சொந்தபந்தங்களிடையே அதிக ஈடுபாடும், அக்கறையும் இருக்கும். தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் தன் நிலை இழக்காமல் இருப்பார்கள். கோபம் இருந்தாலும் அதை அதிகமாக வெளிக்காட்ட மாட்டார்கள். பண விஷயங்களில் கறாராக இருப்பார்கள்.

ஏதாவது ஒரு வகையில் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்கும். பொய்யைச் சொன்னாலும், பொருந்தச் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அதை இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். தாயார் மூலம் நன்மை உண்டு. வருத்தங்கள், கருத்து வேறுபாடுகள், மனக்குறைகள் வந்தாலும் தன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள்.

திட தைரிய வீரியம்
இயல்புகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படாமல் திட்டம் போட்டு காய் நகர்த்தி வெற்றி காண்பார்கள். மனச்சலனம், சஞ்சலம் ஏற்பட்டாலும் காரியத்தில் குறியாக இருப்பார்கள். சில நேரங்களில் தான் என்ற கர்வம், மமதை இருக்கும். அதனால் சுற்றம், நட்பு வட்டங்களில் கெட்ட பெயர் உண்டாகக் கூடும். சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருந்தால் எதையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.

சொத்து சுகம்
சொத்து சேருவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், அனுபவ அறிவும் படிப்பறிவும் கைகொடுக்கும். அரசியல், அதிகார பதவிகள் மூலம் சொத்துகள் சேரும். தாயார், தாய்மாமன் மற்றும் பிற தாய்வழி உறவுகள் மூலம் நிலம், வீடு போன்றவை கிடைக்கும் யோகம் உள்ளவர்கள். மனைவி வழியில் சுகம், செல்வம், செல்வாக்கு கிடைக்கும்.

சீர், வரதட்சணை, அன்பளிப்பு என்று உழைப்பில்லாத செல்வம் சேரும். செவ்வாய் அருள் இருந்தால் பிள்ளைகளால், சகோதர உறவுகளால் நல்ல அனுபவம் உண்டு. பிரயாண ராசி உண்டு. ஏதாவது ஊர்களுக்கு சென்று கொண்டிருப்பார்கள். தலைவலி, தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல் போன்றவை அடிக்கடி உண்டாகும். கண் பார்வையில் அடிக்கடி மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. மலச்சிக்கல், வயது ஆகஆக மறதி நோய், நரம்புத் தளர்ச்சி, கை, கால் மூட்டுகளில் நீர் கோர்த்து வீக்கம் என உபாதைகள் வரும்.

பூர்வ புண்ணியம் குழந்தைகள்
சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் நல்ல அமைப்பில் இருக்கப் பிறந்தவர்களுக்கு, பிள்ளைகளால் ஏற்றம் உண்டு. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இவர்களை தாங்கிப் பிடிப்பார்கள். சகோதர உறவுகளும் கை கொடுக்கும்.

தலைமைப் பதவி தானாக தேடி வரும். கைராசி மிக்கவர்கள் என்று போற்றப்படுவார்கள். வாக்கு பலிதம், மந்திரசக்தி கைகூடும். பெண் தெய்வங்கள், உக்கிர தெய்வங்களை வழிபடுவதில் மனம் லயிக்கும். முருக வழிபாடு நல்ல நிலையைத் தரும். இவர்கள் தொடங்கி வைக்கும் நல்ல காரியங்கள் ஒன்றுக்கு பத்தாக பல்கிப் பெருகும்.

பயணங்கள் மனைவி கூட்டாளிகள்
பயணங்களில் இவர்களின் வாழ்க்கை அதிகமாக கழியும். பயணம் செய்வதில் அதிகம் விருப்பம் உடையவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். இவர்களுடன் பக்தி சுற்றுலா, புனித ஸ்தலங்களுக்கு செல்லும்போது நாம் பல விஷயங்களை இவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

நண்பர்கள், கூட்டாளிகள் என்பது இவர்களுக்கு சரியாக ஒத்து வராது. இவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இவர்களுடன் நீடித்து சேர்ந்து இருக்க முடியும். இவர்களுக்கு வாழ்க்கைத் துணையை பொறுத்தமட்டில் சில சங்கடங்கள் இருக்கும்.

இவர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதால் இருவருக்கும் அடிக்கடி ஊடல், கூடல் இருக்கும். சந்திரன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் நல்ல அமைப்பில் இருக்கப்பிறந்தவர்களுக்கு பெண்கள் வகையில் சொத்து அனுபவிக்கும் யோகம் உண்டு.

இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு திருமணபந்தம் ஏற்பட்டவுடன் தான் முன்னேற்றம் இருக்கும். இவர்கள் பின் யோக அமைப்பு உடையவர்கள்.

தசமஸ்தானம் தொழில்
தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பார்க்கும்போது இவர்கள் நிர்வாகத் திறமைமிக்கவர்களாக இருப்பார்கள். கடினமான உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு குருவும், செவ்வாயும் நல்ல அம்சத்தில் இருந்தால் எந்த துறையில் நுழைந்தாலும் வெற்றி பெறுவார்கள்.

இவர்கள் கலைத்துறையில் பிரகாசிப்பதற்கு யோகம் உண்டு. சிறந்த பேச்சாளர்களாகவும், கதை, காவியம், பாடல்கள், இசை போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களாகவும் திகழ்வார்கள்.

அரசுத்துறை, தனியார் துறையில் முக்கிய நிர்வாக பதவிகள் தேடி வரும். நெருப்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் இவர்களுக்கு நல்ல பலனை தரும்.

இரும்பு, எந்திரம், எண்ணெய் சம்பந்தமான துறைகள் அச்சகத் தொழில், பதிப்பகத் தொழில் கை கொடுக்கும். உலோகங்களை உருக்கிச் செய்யும் வார்படத் தொழில், செங்கல் சூளை, பேக்கரி, ஹோட்டல் தொழில் நல்ல உயர்வைத் தரும். நிலம் சம்பந்தமான தொழில்கள், ரியல் எஸ்டேட், புரோக்கர், கமிஷன் தொழில், அடுக்கு மாடி வீடு கட்டி விற்பது என்று பல வகைகளில் ஜீவனமும், அதன் மூலம் பெயரும், புகழும் பெரும் தனமும் செல்வாக்கும் கிடைக்கப் பெறுவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: