உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு அவற்றை தவிருங்கள்!

0
1001

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரில்லாமல் இருப்பதான் தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் , தலைவலி வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும்.

சர்க்கரை நோயளிகள்:
சர்க்கரையின் அளவு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது, தலைவலி ஏற்படும். எனவே, குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாகச் சாப்பிட வேண்டும். சர்க்கரை அளவு காரணமாகத்தான் தலைவலி ஏற்படுகிறதென்றால் சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் போதும். தலைவலிக்காக மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

கண்பார்வை :
கணினி, மொபைல் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி. 30 வயதைக் கடந்தவர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு தினமும் தலைவலி ஏற்படுகிறது எனில், முதலில் கண் பரிசோதனை அவசியம்.

குளுக்கோமா போன்ற கண் பிரச்னைகள் இருந்தால், பெரும்பாலும் தலைவலி ஏற்படும். 100-ல் 25 பேருக்கு, கண்களில் ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.

சைனஸ்
முகத்தில் மொத்தம் எட்டு சைனஸ் அறைகள் உண்டு. அதில் நெற்றிப்பகுதியில் இரண்டு சைனஸ் அறைகள் அமைந்துள்ளன. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சைனஸ் அறை மூடிக் கொள்ளும். இதனால் அறைக்குள் சளி பிடித்துவிடும். இதனால், மூக்கு, கன்னம், தலை, நெற்றி ஆகிய இடங்களில் வலி ஏற்படும். சைனஸ் பிரச்னைக்கு அலர்ஜி ஒரு காரணம்.

சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். குனிந்தால் பாரமாக இருப்பது போல் உணர்வார்கள். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

ஒற்றை தலைவலி :
சிலருக்கு ஒரு பக்கம் மட்டும் விண் விணென்று வலி உண்டாகும். குறிப்பிட்ட உணவு சாப்பிடும்போது தலைவலி உண்டானால் அந்த உணவை தவிர்க்க வேண்டும். ஒருசிலருக்கு பருவ நிலை மாறும்போதும் இது போல வரும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் தலைவலி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒற்றைத் த்லைவலிக்கு இதுதான் காரனம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. மூளையில் இருக்கும் வேதியியல் ரசாயனங்கள் சரியான விகிதத்தில் சுரக்கவில்லை என்றாலும் தலைவலி வரும்.

அலர்ஜி :
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானவிஷயங்களால் தலைவலி உண்டாகும். வாசனை திரவியங்களா, புகையால், தலைக்குக் குளிப்பதால், தாங்க முடியாத வெயிலால், அதிக நேரம் குளிர்சாதன அறையில் இருப்பது, உஷ்ணப் பகுதியில் வேலை செய்வது, தினமும் குறைவான தூக்கம், காலை உணவைத் தவிர்ப்பது, ஒவ்வாமை தரும் உணவுகளை உட்கொள்வது, நீண்ட நேரம் பேருந்து பயணம் என பல காரணங்கள் இருக்கிறது.

வெகுசிலருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டாலும் தலை வலி ஏற்படும். தாங்க முடியாத தலைவலியும் அதனால் வாந்தியும் ஏற்படும். தினமும் வலி உண்டாகும். நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமனதை ஒருமுகப்படுத்த மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அற்புத உணவுகள்!
Next articleஆவாரம்பூவின் ஆயுர்வேத நன்மைகள்!