Thirukkural Veruvanda seiyamai Adhikaram-57 திருக்குறள் வெருவந்தசெய்யாமை அதிகாரம்-57 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil

0

Thirukkural Veruvanda seiyamai Adhikaram-57 (veruvantha seiyamai) திருக்குறள் வெருவந்தசெய்யாமை அதிகாரம்-57 அரசியல் பொருட்பால் Thirukkural Veruvanda seiyamai Adhikaram-57 Arasiyal Porutpal in Tamil. திருக்குறள் வெருவந்தசெய்யாமை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-57 அரசியல் பொருட்பால். வெருவந்த செய்யாமை Veruvanda seiyamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Veruvanda seiyamai Chapter-57. வெருவந்த செய்யாமை அதிகாரம் 57.

Thirukkural Veruvanda seiyamai Adhikaram-57

திருக்குறள் பா: 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

kural 561: thakkaangu naatith thalaichchellaa vannaththaal oththaangu oruppadhu vendhu

திரு மு.வரதராசனார் பொருள்:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

மணக்குடவர் பொருள்:
குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.

கலைஞர் பொருள்:
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

திருக்குறள் பா: 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

kural 562: katidhochchi mella erika netidhaakkam neengaamai ventu pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
கடிதாகச் செய்வாரைப் போன்று மெல்லிதாகச் செய்க, நெடிதாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார். இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.

கலைஞர் பொருள்:
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

திருக்குறள் பா: 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

kural 563: veruvandha seydhozhukum vengola naayin oruvandham ollaik ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

மணக்குடவர் பொருள்:
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.

கலைஞர் பொருள்:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சியமாக விரைவில் அழியும்.

சாலமன் பாப்பையா பொருள்:
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

திருக்குறள் பா: 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

kural 564: iraikatiyan endruraikkum innaachchol vendhan uraikatuki ollaik ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

மணக்குடவர் பொருள்:
தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன் தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும். இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.

கலைஞர் பொருள்:
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடி மக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

திருக்குறள் பா: 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

kural 565: arunjevvi innaa mukaththaan perunjelvam peeykan tannadhu utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

மணக்குடவர் பொருள்:
காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவனது பெரிய செல்வம் பேயைக்கண்டதொக்க அச்சந் தருதலுடைத்து. இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேரா தென்றது.

கலைஞர் பொருள்:
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

திருக்குறள் பா: 566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

kural 566: katunjollan kannilan aayin netunjelvam neetindri aange ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

மணக்குடவர் பொருள்:
அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும். இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது

கலைஞர் பொருள்:
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்து விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

திருக்குறள் பா: 567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

kural 567: katumozhiyum kaiyikandha thantamum vendhan atumuran theykkum aram

திரு மு.வரதராசனார் பொருள்:
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

மணக்குடவர் பொருள்:
கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம். இது வலியைக் கெடுக்கும் என்றது.

கலைஞர் பொருள்:
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

சாலமன் பாப்பையா பொருள்:
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

திருக்குறள் பா: 568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

kural 568: inaththaatri ennaadha vendhan sinaththaatrich cheerir sirukum thiru

திரு மு.வரதராசனார் பொருள்:
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

மணக்குடவர் பொருள்:
பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடியசொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது செல்வம் நாடோறும் சுருங்கும். ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின் அவன்செல்வம் குறையுமென்றாவறு. இனம்- மந்திரி, புரோகிதர்.

கலைஞர் பொருள்:
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

திருக்குறள் பா: 569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

kural 569: seruvandha pozhdhir siraiseyyaa vendhan veruvandhu veydhu ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

மணக்குடவர் பொருள்:
தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும். இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

கலைஞர் பொருள்:
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்

திருக்குறள் பா: 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

kural 570: kallaarp pinikkum katungol adhuvalladhu illai nilakkup porai

திரு மு.வரதராசனார் பொருள்:
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

மணக்குடவர் பொருள்:
கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை.

கலைஞர் பொருள்:
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்குப் பக்க பலமாக்கிக் கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Kannottam Adhikaram-58 திருக்குறள் கண்ணோட்டம் அதிகாரம்-58 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil
Next articleThirukkural Otradal Adhikaram-56 திருக்குறள் கொடுங்கோன்மை அதிகாரம்-56 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil