Thirukkural Thagai Ananguruthal Adhikaram-109 திருக்குறள் தகையணங்குறுத்தல் அதிகாரம்-109 களவியல் காமத்துப்பால் Kalaviyal Kamathupal in Tamil

0

Thirukkural Thagai Ananguruthal Adhikaram-109 (thagai anakkuruththal) திருக்குறள் தகையணங்குறுத்தல் அதிகாரம்-109 களவியல் காமத்துப்பால் Thirukkural Thagai Ananguruthal Adhikaram-109 Kalaviyal Kamathupal in Tamil. திருக்குறள் பொருள் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-109. தகை அணங்குறுத்தல்.

Thirukkural Thagai Ananguruthal Adhikaram-109

Thirukkural Thagai Ananguruthal Adhikaram-109

திருக்குறள் பா: 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

kural 1081: anangukol aaimayil kollo kananguzhai maadharkol maalum en nenju

திரு மு.வரதராசனார் பொருள்:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

மணக்குடவர் பொருள்: இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.

கலைஞர் பொருள்: எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

சாலமன் பாப்பையா பொருள்: அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.

திருக்குறள் பா: 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

kural 1082: nokkinaal nokkedhir nokkudhal thaakkanangu thaanaikkon tanna thutaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

மணக்குடவர் பொருள்: இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.

கலைஞர் பொருள்: அவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது.

சாலமன் பாப்பையா பொருள்: என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

திருக்குறள் பா: 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

kural 1083: pantariyen kootren padhanai iniyarindhen pentakaiyaal peramark kattu

திரு மு.வரதராசனார் பொருள்:
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

மணக்குடவர் பொருள்: பண்டு கூற்றின்வடிவு இன்னபெற்றித்தென்பதை அறியேன்: இப்பொழுது அறிந்தேன். அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களையுடைத்து. இது நம்மை வருத்தற்குத் தக்காளென்னுங் குறிப்பு.

கலைஞர் பொருள்: கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

சாலமன் பாப்பையா பொருள்: எமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.

திருக்குறள் பா: 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

kural 1084: kantaar uyirunnum thotraththaal pentakaip pedhaikku amarththana kan

திரு மு.வரதராசனார் பொருள்:
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

மணக்குடவர் பொருள்: தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள். அமர்தல் – மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.

கலைஞர் பொருள்: பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?.

சாலமன் பாப்பையா பொருள்: பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

திருக்குறள் பா: 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

kural 1085: kootramo kanno pinaiyo matavaral nokkamim moondrum utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

மணக்குடவர் பொருள்: கொடுமை செய்தலால் கூற்றமோ? ஓடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே! நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து. இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ? என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.

கலைஞர் பொருள்: உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

சாலமன் பாப்பையா பொருள்: என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.

திருக்குறள் பா: 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

kural 1086: kotumpuruvam kotaa maraippin natungagnar seyyala manival kan

திரு மு.வரதராசனார் பொருள்:
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

மணக்குடவர் பொருள்: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா. இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.

கலைஞர் பொருள்: புருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

சாலமன் பாப்பையா பொருள்: அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

திருக்குறள் பா: 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

kural 1087: kataaak kalitrinmer katpataam maadhar pataaa mulaimel thukil

திரு மு.வரதராசனார் பொருள்:
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

மணக்குடவர் பொருள்: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.

கலைஞர் பொருள்: மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.

சாலமன் பாப்பையா பொருள்: அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

திருக்குறள் பா: 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

kural 1088: onnudhar koo utaindhadhe gnaatpinul nannaarum utkumen peetu

திரு மு.வரதராசனார் பொருள்:
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

மணக்குடவர் பொருள்: இவ்வொள்ளிய நுதற்கு மிகவுங் கெட்டது, போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி. இது மேற்கூறிய தலைமகன் மிகவுங் கவிழ்ந்து நிலம்நோக்கிப் புருவத்தின் மேற்றோன்றிய தலைமகள் நுதல் கண்டு கூறியது.

கலைஞர் பொருள்: களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!.

சாலமன் பாப்பையா பொருள்: களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

திருக்குறள் பா: 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

kural 1089: pinaiyer matanokkum naanum utaiyaatku aniyevano edhila thandhu

திரு மு.வரதராசனார் பொருள்:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

மணக்குடவர் பொருள்: பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

கலைஞர் பொருள்: பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

சாலமன் பாப்பையா பொருள்: பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

திருக்குறள் பா: 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

kural 1090: untaarkan alladhu atunaraak kaamampol kantaar makizhseydhal indru

திரு மு.வரதராசனார் பொருள்:
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

மணக்குடவர் பொருள்: அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.

கலைஞர் பொருள்: மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.

சாலமன் பாப்பையா பொருள்: காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 16.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை !
Next articleஎன் கவிதைகள்! Ean Kavithaigal (Tamilpiththan kavithai-5)