Thirukkural Seinandri Arithal Adhikaram-11 திருக்குறள் செய்ந்நன்றி அறிதல் அதிகாரம்-11 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil

0

Thirukkural Seinandri Arithal Adhikaram-11 (Seinandri Arithal) திருக்குறள் செய்ந்நன்றி அறிதல் அதிகாரம்-11 இல்லறவியல் அறத்துப்பால் Thirukkural Seinandri Arithal Adhikaram-11 Illaraviyal Arathupal in Tamil. திருக்குறள் செய்ந்நன்றி அறிதல் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-11 இல்லறவியல் அறத்துப்பால். செய்ந்நன்றி அறிதல் Seinandri Arithal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Seinandri Arithal Chapter-11. செய்ந்நன்றி அறிதல் அதிகாரம் 11.

Thirukkural Seinandri Arithal Adhikaram-11

Thirukkural Seinandri Arithal Adhikaram-11

திருக்குறள் பா: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

kural 101: seyyaamal seydha udhavikku vaiyakamum vaanakamum aatral aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

மணக்குடவர் பொருள்:
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

கலைஞர் பொருள்:
“வாராது வந்த மாமணி” என்பதுபோல், “செய்யாமற் செய்த உதவி” என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

திருக்குறள் பா: 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

kural 102: kaalaththi naarseydha nandri siridheninum gnaalaththin maanap peridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

மணக்குடவர் பொருள்:
உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது. இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

கலைஞர் பொருள்:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

திருக்குறள் பா: 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

kural 103: payandhookkaar seydha udhavi nayandhookkin nanmai katalin peridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

மணக்குடவர் பொருள்:
தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

கலைஞர் பொருள்:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

சாலமன் பாப்பையா பொருள்:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

திருக்குறள் பா: 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

kural 104: thinaiththunai nandri seyinum panaiththunaiyaak kolvar payandheri vaar

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

மணக்குடவர் பொருள்:
தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர். பனையளவு- அதனுயர்ச்சி

கலைஞர் பொருள்:
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

சாலமன் பாப்பையா பொருள்:
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

திருக்குறள் பா: 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

kural 105: udhavi varaiththandru udhavi udhavi seyappattaar saalpin varaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

மணக்குடவர் பொருள்:
முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி. இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

கலைஞர் பொருள்:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொறுத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.

திருக்குறள் பா: 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

kural 106: maravarka maasatraar kenmai thuravarka thunpaththul thuppaayaar natpu

திரு மு.வரதராசனார் பொருள்:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

மணக்குடவர் பொருள்:
தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.

கலைஞர் பொருள்:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

சாலமன் பாப்பையா பொருள்:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

திருக்குறள் பா: 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

kural 107: ezhumai ezhupirappum ulluvar thangan vizhuman thutaiththavar natpu

திரு மு.வரதராசனார் பொருள்:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

மணக்குடவர் பொருள்:
தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

கலைஞர் பொருள்:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்லுவதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

சாலமன் பாப்பையா பொருள்:
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

திருக்குறள் பா: 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

kural 108: nandri marappadhu nandrandru nandralladhu andre marappadhu nandru

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

மணக்குடவர் பொருள்:
பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம். இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

கலைஞர் பொருள்:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

திருக்குறள் பா: 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

kural 109: kondranna innaa seyinum avarseydha ondrunandru ullak ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

மணக்குடவர் பொருள்:
தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.

கலைஞர் பொருள்:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

சாலமன் பாப்பையா பொருள்:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

திருக்குறள் பா: 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

kural 110: ennandri kondraarkkum uyvuntaam uyvillai seynnandri kondra makarku

திரு மு.வரதராசனார் பொருள்:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

மணக்குடவர் பொருள்:
எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

கலைஞர் பொருள்:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Iniyavai Kooral Adhikaram-10 திருக்குறள் இனியவை கூறல் அதிகாரம்-10 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleThirukkural Poraiyudaimai Adhikaram-16 திருக்குறள் பொறையுடைமை அதிகாரம்-16 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil