Thirukkural Periyarai Pizhaiyamai Adhikaram-90 திருக்குறள் பெரியாரைப் பிழையாமை அதிகாரம்-90 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil

0

Thirukkural Periyarai Pizhaiyamai Adhikaram-90 (Periyaraip Pilaiyamai) திருக்குறள் பெரியாரைப் பிழையாமை அதிகாரம்-90 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Thirukkural Periyarai Pizhaiyamai Adhikaram-90 Angaviyal / Natpiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-90 அங்கவியல் பெரியாரைப் பிழையாமை / நட்பியல் பெரியாரைப் பிழையாமை. Periyarai Pizhaiyamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Periyarai Pizhaiyamai Chapter-90.

Thirukkural Periyarai Pizhaiyamai Adhikaram-90

Thirukkural Periyarai Pizhaiyamai Adhikaram-90

திருக்குறள் பா: 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

kural 891: aatruvaar aatral ikazhaamai potruvaar potralul ellaam thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

மணக்குடவர் பொருள்: தவத்தினாலும் வலியினாலும் பெரியாரது வலியை இகழாதொழிதல், தம்மைக் காப்பார்க்குக் காவலாகிய எல்லாவற்றுள்ளும் தலையான காவலாம். இது பெரியாரைப் பிழையாமையால் வரும் பயன் கூறிற்று.

கலைஞர் பொருள்: ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா பொருள்: எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

திருக்குறள் பா: 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

kural 892: periyaaraip penaadhu ozhukir periyaaraal peraa itumpai tharum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

மணக்குடவர் பொருள்: பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.

கலைஞர் பொருள்: பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

சாலமன் பாப்பையா பொருள்: பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

திருக்குறள் பா: 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

kural 893: ketalventin kelaadhu seyka atalventin aatru pavarkan izhukku

திரு மு.வரதராசனார் பொருள்:
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

மணக்குடவர் பொருள்: தான் கெடுதல் வேண்டுவனாயின், பெரியாரைக் கேளாதே ஒருவினையைச் செய்க. தன்னைக் கொல்ல வேண்டுவனாயின், வலியுடையார் மாட்டே தப்புச் செய்க.

கலைஞர் பொருள்: ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

திருக்குறள் பா: 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

kural 894: kootraththaik kaiyaal viliththatraal aatruvaarkku aatraadhaar innaa seyal

திரு மு.வரதராசனார் பொருள்:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

மணக்குடவர் பொருள்: வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

கலைஞர் பொருள்: எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.

சாலமன் பாப்பையா பொருள்: அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

திருக்குறள் பா: 895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

kural 895: yaantuch chendru yaantum ularaakaar vendhuppin vendhu serappat tavar

திரு மு.வரதராசனார் பொருள்:
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

மணக்குடவர் பொருள்: எவ்விடத்துச் செல்லினும் எவ்விடத்தும் உளராகார்: வெய்ய வலிமையுடைய வேந்தனால் செறப்பட்டார். இது கெட்டுப்போனாலும் இருக்கலாவதோர் அரணில்லை யென்றது.

கலைஞர் பொருள்: மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்: பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

திருக்குறள் பா: 896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

kural 896: eriyaal sutappatinum uyvuntaam uyyaar periyaarp pizhaiththozhuku vaar

திரு மு.வரதராசனார் பொருள்:
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி பிழைக்க முடியாது.

மணக்குடவர் பொருள்: தீயினால் சுடப்படினும் உய்தல் உண்டாம்: பெரியாரைப் பிழைத்தொழுகுவார் உய்யார். இது முனிவரைப் பிழைத்தலினால் வருங்குற்றம் கூறிற்று. முற்பட உயிர்க்கேடு வருமென்று கூறினார்.

கலைஞர் பொருள்: நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்: தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

திருக்குறள் பா: 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

kural 897: vakaimaanta vaazhkkaiyum vaanporulum ennaam thakaimaanta thakkaar serin

திரு மு.வரதராசனார் பொருள்:
தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

மணக்குடவர் பொருள்: எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின.

கலைஞர் பொருள்: பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.

சாலமன் பாப்பையா பொருள்: குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

திருக்குறள் பா: 898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

kural 898: kundrannaar kundra madhippin kutiyotu nindrannaar maaivar nilaththu

திரு மு.வரதராசனார் பொருள்:
மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

மணக்குடவர் பொருள்: மலைபோலப் பெரியாரைக் குறைய மதிப்பாராயின், உலகத்தின் கண்ணே நின்றாற்போலத் தோன்றுகின்றவர் குடியோடே கூடமாய்வர். குன்ற மதித்தல்- அவமதித்தல்.

கலைஞர் பொருள்: மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்: மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

திருக்குறள் பா: 899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

kural 899: endhiya kolkaiyaar seerin itaimurindhu vendhanum vendhu ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

மணக்குடவர் பொருள்: உயர்ந்த கோட்பாட்டை யுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும். இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.

கலைஞர் பொருள்: உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்: உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

திருக்குறள் பா: 900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

kural 900: irandhamaindha saarputaiyar aayinum uyyaar sirandhamaindha seeraar serin

திரு மு.வரதராசனார் பொருள்:
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

மணக்குடவர் பொருள்: மிகவும் அமைந்த துணையுடைய ராயினும் கெடுவர்: மிகவும் அமைந்த சீர்மையுடையார் செறுவாராயின். இது துணையுடையாராயினும் உயிர்க்கேடு வருமென்றது.

கலைஞர் பொருள்: என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.

சாலமன் பாப்பையா பொருள்: மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Pen vazhi cheral Adhikaram-91 திருக்குறள் பெண்வழிச்சேறல் அதிகாரம்-91 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal / Natpiyal Porutpal in Tamil
Next articleThirukkural Naadu Adhikaram-74 திருக்குறள் நாடு அதிகாரம்-74 அங்கவியல் / அரணியல் பொருட்பால் Angaviyal / Araniyal Porutpal in Tamil Nadu