Thirukkural Naduvu Nilamai Adhikaram-12 திருக்குறள் நடுவு நிலைமை அதிகாரம்-12 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil

0

Thirukkural Naduvu Nilamai Adhikaram-12 (Naduvu Nilamai) திருக்குறள் நடுவு நிலைமை அதிகாரம்-12 இல்லறவியல் அறத்துப்பால் Thirukkural Naduvu Nilamai Adhikaram-12 Illaraviyal Arathupal in Tamil. திருக்குறள் நடுவு நிலைமை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-12 இல்லறவியல் அறத்துப்பால். நடுவு நிலைமை Naduvu Nilamai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Naduvu Nilamai Chapter-12. நடுவு நிலைமை அதிகாரம் 12.

Thirukkural Naduvu Nilamai Adhikaram-12

Thirukkural Naduvu Nilamai Adhikaram-12

திருக்குறள் பா: 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

kural 111: thakudhi enavondru nandre pakudhiyaal paarpattu ozhukap perin

திரு மு.வரதராசனார் பொருள்:
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

மணக்குடவர் பொருள்:
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

கலைஞர் பொருள்:
பகைவர், அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

திருக்குறள் பா: 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

kural 112: seppam utaiyavan aakkanj chidhaivindri echchaththir kemaappu utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

மணக்குடவர் பொருள்:
நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

கலைஞர் பொருள்:
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

திருக்குறள் பா: 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

kural 113: nandre tharinum natuvikandhaam aakkaththai andre yozhiya vital

திரு மு.வரதராசனார் பொருள்:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.

கலைஞர் பொருள்:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

திருக்குறள் பா: 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

kural 114: thakkaar thakavilar enpadhu avaravar echchaththaar kaanap patum

திரு மு.வரதராசனார் பொருள்:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

மணக்குடவர் பொருள்:
செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும். இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.)

கலைஞர் பொருள்:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

திருக்குறள் பா: 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

kural 115: ketum perukkamum illalla nenjaththuk kotaamai saandrork kani

திரு மு.வரதராசனார் பொருள்:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

மணக்குடவர் பொருள்:
கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

கலைஞர் பொருள்:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

திருக்குறள் பா: 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

kural 116: ketuvalyaan enpadhu arikadhan nenjam natuvoreei alla seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

கலைஞர் பொருள்:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

திருக்குறள் பா: 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

kural 117: ketuvaaka vaiyaadhu ulakam natuvaaka nandrikkan thangiyaan thaazhvu

திரு மு.வரதராசனார் பொருள்:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

மணக்குடவர் பொருள்:
நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

கலைஞர் பொருள்:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

சாலமன் பாப்பையா பொருள்:
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

திருக்குறள் பா: 118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

kural 118: samanseydhu seerdhookkung kolpol amaindhorupaal kotaamai saandrork kani

திரு மு.வரதராசனார் பொருள்:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

மணக்குடவர் பொருள்:
சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது. இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

திருக்குறள் பா: 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

kural 119: sorkottam illadhu seppam orudhalaiyaa utkottam inmai perin

திரு மு.வரதராசனார் பொருள்:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

மணக்குடவர் பொருள்:
நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின். இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இது பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.

கலைஞர் பொருள்:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

சாலமன் பாப்பையா பொருள்:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.

திருக்குறள் பா: 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

kural 120: vaanikam seyvaarkku vaanikam penip piravum thamapol seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

மணக்குடவர் பொருள்:
வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின். வாணிகம் – இலாபம்.

கலைஞர் பொருள்:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Anbudaimai Adhikaram-8 திருக்குறள் அன்புடைமை அதிகாரம்-8 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleThirukkural Adakkam Udaimai Adhikaram-13 திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரம்-13 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil