Thirukkural Madiyinmai Adhikaram-61 திருக்குறள் மடி இன்மை அதிகாரம்-61 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil

0

Thirukkural Madiyinmai Adhikaram-61 (Madi Inmai) திருக்குறள் மடி இன்மை அதிகாரம்-61 அரசியல் பொருட்பால் Thirukkural Madiyinmai Adhikaram-61 Arasiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-61 அரசியல் பொருட்பால். மடியின்மை Madiyinmai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Madiyinmai Chapter-61. மடி இன்மை அதிகாரம் 61.

Thirukkural Madiyinmai Adhikaram-61

Thirukkural Madiyinmai Adhikaram-61

திருக்குறள் பா: 601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

kural 601: kutiyennum kundraa vilakkam matiyennum maasoora maaindhu ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

மணக்குடவர் பொருள்:
குடியென்று சொல்லப்படுகின்ற குறைவில்லாத ஒளி, மடியென்று சொல்லப்படுகின்ற மாசு மறைக்கத் தோன்றாது கெடும். முன்பே தோற்றமுடைத்தாகிய குடியுங் கெடுமென்றவாறு.

கலைஞர் பொருள்:
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

திருக்குறள் பா: 602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

kural 602: matiyai matiyaa ozhukal kutiyaik kutiyaaka ventu pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
மடிசெய்தலை மடித்து ஒழுகுக: தங்குடியை உயர் குடியாக வேண்டுபவர். இது சோம்பாமை வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்:
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

திருக்குறள் பா: 603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து.

kural 603: matimatik kontozhukum pedhai pirandha kutimatiyum thanninum mundhu

திரு மு.வரதராசனார் பொருள்:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

மணக்குடவர் பொருள்:
நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி தனக்கு முன்பே கெடும். சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.

கலைஞர் பொருள்:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

திருக்குறள் பா: 604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

kural 604: kutimatindhu kutram perukum matimatindhu maanta ugnatri lavarkku

திரு மு.வரதராசனார் பொருள்:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

மணக்குடவர் பொருள்:
குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.

கலைஞர் பொருள்:
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

திருக்குறள் பா: 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

kural 605: netuneer maravi matidhuyil naankum ketuneeraar kaamak kalan

திரு மு.வரதராசனார் பொருள்:
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

மணக்குடவர் பொருள்:
விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம். காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

கலைஞர் பொருள்:
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!

சாலமன் பாப்பையா பொருள்:
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

திருக்குறள் பா: 606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

kural 606: patiyutaiyaar patramaindhak kannum matiyutaiyaar maanpayan eydhal aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

மணக்குடவர் பொருள்:
பூமியையுடைய வேந்தர் பலபொருளினாலும் அமைந்த விடத்தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை. இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.

கலைஞர் பொருள்:
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

திருக்குறள் பா: 607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

kural 607: itipurindhu ellunj chol ketpar matipurindhu maanta ugnatri lavar

திரு மு.வரதராசனார் பொருள்:
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

மணக்குடவர் பொருள்:
கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட்பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்.

கலைஞர் பொருள்:
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

திருக்குறள் பா: 608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

kural 608: matimai kutimaikkan thangindhan onnaarkku atimai pukuththi vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

மணக்குடவர் பொருள்:
குடிப்பிறந்தார்மாட்டே மடிமை தங்குமாயின் அது தன்பகைவர்க்கு அடிமையாக்கிவிடும். இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.

கலைஞர் பொருள்:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்

சாலமன் பாப்பையா பொருள்:
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

திருக்குறள் பா: 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

kural 609: kutiyaanmai yulvandha kutram oruvan matiyaanmai maatrak ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

மணக்குடவர் பொருள்:
குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.

கலைஞர் பொருள்:
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

திருக்குறள் பா: 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

kural 610: matiyilaa mannavan eydhum atiyalandhaan thaaaya thellaam orungu

திரு மு.வரதராசனார் பொருள்:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

மணக்குடவர் பொருள்:
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.

கலைஞர் பொருள்:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Aalvinai Udaimai Adhikaram-62 திருக்குறள் ஆள்வினையுடைமை அதிகாரம்-62 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil
Next articleThirukkural Ukkam udaimai Adhikaram-60 திருக்குறள் ஊக்கமுடைமை அதிகாரம்-60 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil