Thirukkural Iravu Adhikaram-106 திருக்குறள் இரவு அதிகாரம்-106 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil

0

Thirukkural Iravu Adhikaram-106 (Iravu) திருக்குறள் இரவு அதிகாரம்-106 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Thirukkural Iravu Adhikaram-106 Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-106 ஒழிபியல் இரவு / குடியியல் இரவு.

Thirukkural Iravu Adhikaram-106

Thirukkural Iravu Adhikaram-106

திருக்குறள் பா: 1051
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.

kural 1051: irakka iraththakkaark kaanin karappin avarpazhi thampazhi andru

திரு மு.வரதராசனார் பொருள்:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

மணக்குடவர் பொருள்: தமக்கு இல்லாதவிடத்து இரக்கத்தக்காரைக் காணின் இரந்து கொள்க: அவர் இல்லை யென்பாராயின் அஃது அவர்க்குப் பழியாம்; தமக்குப் பழியாகாது. இது கூறுகின்ற இரத்தல் எல்லார்மாட்டுஞ் செயலாகா தென்பதூஉம், தக்கார் மாட்டிரத்தலென்பதூஉம் கூறிற்று.

கலைஞர் பொருள்: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

சாலமன் பாப்பையா பொருள்: ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது இழிவாகாது என்று தோன்றுகிழதோ அவரிடம் பிச்சை ஏற்கலாம்; அவர் தர மறுத்து, மறைத்தால் பழி அவர்க்கே; இரப்பவர்க்கு அன்று.

திருக்குறள் பா: 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

kural 1052: inpam oruvarku iraththal irandhavai thunpam uraaa varin

திரு மு.வரதராசனார் பொருள்:
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.

மணக்குடவர் பொருள்: இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம், இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின். இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.

கலைஞர் பொருள்: வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

திருக்குறள் பா: 1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

kural 1053: karappilaa nenjin katanarivaar munnindru irappumo reer utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

மணக்குடவர் பொருள்: கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும் ஓரழகுடைத்து. இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.

கலைஞர் பொருள்: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

திருக்குறள் பா: 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

kural 1054: iraththalum eedhale polum karaththal kanavilum thetraadhaar maattu

திரு மு.வரதராசனார் பொருள்:
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.

மணக்குடவர் பொருள்: கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டு இரந்து சேறலும் கொடுப்பதனோடு ஒக்கும். ஈதலேபோலும் என்பதற்குக் கரத்தல் கனவிலுந் தேற்றதார் என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படும்.

கலைஞர் பொருள்: இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈ.வது போன்ற பெருமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.

திருக்குறள் பா: 1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

kural 1055: karappilaar vaiyakaththu unmaiyaal kannindru irappavar merkol vadhu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

மணக்குடவர் பொருள்: ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே; மற்றொன்றாலன்று. மேல் கரவாதார்மாட்டு இரக்கவென்றார்; உலகத்தில் அவரைப் பெறுத லரிதென்றார்க்கு இது கூறினார்.

கலைஞர் பொருள்: உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

சாலமன் பாப்பையா பொருள்: கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

திருக்குறள் பா: 1056
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

kural 1056: karappitumpai yillaaraik kaanin nirappitumpai ellaam orungu ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

மணக்குடவர் பொருள்: கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.

கலைஞர் பொருள்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

சாலமன் பாப்பையா பொருள்: இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

திருக்குறள் பா: 1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

kural 1057: ikazhndhellaadhu eevaaraik kaanin makizhndhullam ullul uvappadhu utaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் பொருள்: இரப்பாரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி அவர் சொன்ன மாற்றத்தை இகழ்ந்துரைத்தலும் செய்யாது வேண்டப்பட்டதனைக் கொடுப்பாரைக் காணின், இரந்து சென்றவர் மனம் மகிழ்ந்து நின்று உள்ளுள்ளே இன்புறுந் தன்மை யுடைத்து.

கலைஞர் பொருள்: இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

சாலமன் பாப்பையா பொருள்: அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை கொள்ளும்.

திருக்குறள் பா: 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

kural 1058: irappaarai illaayin eernganmaa gnaalam marappaavai sendruvan thatru

திரு மு.வரதராசனார் பொருள்:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

மணக்குடவர் பொருள்: குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்றுவந்து இயங்கினாற்போலும். இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான் இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.

கலைஞர் பொருள்: வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்: பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

திருக்குறள் பா: 1059
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

kural 1059: eevaarkan ennuntaam thotram irandhukol mevaar ilaaak katai

திரு மு.வரதராசனார் பொருள்:
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

மணக்குடவர் பொருள்: இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக கருதியிருப்பார்மாட்டுப் புகழ் யாதான் உண்டாம். இஃது இரப்பாரில்லாராயின் புகழுடையார் இலராவார். ஆதலால் இரவு பழிக்கப்படா தென்றது.

கலைஞர் பொருள்: இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.

சாலமன் பாப்பையா பொருள்: தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?.

திருக்குறள் பா: 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

kural 1060: irappaan vekulaamai ventum nirappitumpai thaaneyum saalum kari

திரு மு.வரதராசனார் பொருள்:
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.

மணக்குடவர் பொருள்: ஒருவனை யிரந்தால் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும். பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று. இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று.

கலைஞர் பொருள்: இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

சாலமன் பாப்பையா பொருள்: பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது என்பதற்கு அவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமே போதுமான சான்றாகும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 18.01.2020 இன்றைய பஞ்சாங்கம் சனிக்கிழமை !
Next articleThirukkural Nalkuravu Adhikaram-105 திருக்குறள் நல்குரவு அதிகாரம்-105 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil நல்குரவு