Thirukkural Iraimaatchi Adhikaram-39 திருக்குறள் இறைமாட்சி அதிகாரம்-39 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil

0

Thirukkural Iraimaatchi Adhikaram-39 (Iraimatchi) திருக்குறள் இறைமாட்சி அதிகாரம்-39 அரசியல் பொருட்பால் Thirukkural Iraimaatchi Adhikaram-39 Arasiyal Porutpal in Tamil. திருக்குறள் இறைமாட்சி பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-39 அரசியல் பொருட்பால். இறைமாட்சி Iraimaatchi Thirukkural by Thiruvalluvar. Thirukkural Iraimaatchi Chapter-39. இறைமாட்சி அதிகாரம் 39.

Thirukkural Iraimaatchi Adhikaram-39

Thirukkural Iraimaatchi Adhikaram-39

திருக்குறள் பா: 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

kural 381: pataikuti koozhamaichchu natparan aarum utaiyaan arasarul eru

திரு மு.வரதராசனார் பொருள்:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

மணக்குடவர் பொருள்:
படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.

கலைஞர் பொருள்:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

திருக்குறள் பா: 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

kural 382: anjaamai eekai arivookkam innaankum enjaamai vendhark kiyalpu

திரு மு.வரதராசனார் பொருள்:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

மணக்குடவர் பொருள்:
அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.

கலைஞர் பொருள்:
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் – இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

திருக்குறள் பா: 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

kural 383: thoongaamai kalvi thunivutaimai immoondrum neengaa nilanaan pavarkku

திரு மு.வரதராசனார் பொருள்:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

மணக்குடவர் பொருள்:
மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

கலைஞர் பொருள்:
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

திருக்குறள் பா: 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

kural 384: aranizhukkaa thallavai neekki maranizhukkaa maanam utaiya tharasu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

மணக்குடவர் பொருள்:
அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

கலைஞர் பொருள்:
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

திருக்குறள் பா: 385
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.

kural 385: iyatralum eettalung kaaththalum kaaththa vakuththalum valla tharasu

திரு மு.வரதராசனார் பொருள்:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

மணக்குடவர் பொருள்:
பொருள் வரும்வழி யியற்றலும் அதனை அழியாம லீட்டலும் அதனைச் சோர்வுபடாமற் காத்தலும் காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத்தலும் வல்லவன் அரசனாவான். பகுத்தல்- யானை குதிரை முதலிய படைக்குக் கொடுத்து அவையிற்றை யுண்டாக்குதல். இது பண்டாரங் கூறுமாறு கூறிற்று.

கலைஞர் பொருள்:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.

திருக்குறள் பா: 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

kural 386: kaatchik keliyan katunjollan allanel meekkoorum mannan nilam

திரு மு.வரதராசனார் பொருள்:
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

மணக்குடவர் பொருள்:
காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

கலைஞர் பொருள்:
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

சாலமன் பாப்பையா பொருள்:
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).

திருக்குறள் பா: 387
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

kural 387: insolaal eeththalikka vallaarkkuth thansolaal thaankan tanaiththiv vulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

மணக்குடவர் பொருள்:
இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.

கலைஞர் பொருள்:
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

திருக்குறள் பா: 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

kural 388: muraiseydhu kaappaatrum mannavan makkatku iraiyendru vaikkap patum

திரு மு.வரதராசனார் பொருள்:
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.

மணக்குடவர் பொருள்:
குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.

கலைஞர் பொருள்:
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான்.

சாலமன் பாப்பையா பொருள்:
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

திருக்குறள் பா: 389
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

kural 389: sevikaippach chorporukkum panputai vendhan kavikaikkeezhth thangum ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.

மணக்குடவர் பொருள்:
தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.

கலைஞர் பொருள்:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

திருக்குறள் பா: 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

kural 390: kotaiyali sengol kutiyompal naankum utaiyaanaam vendhark koli

திரு மு.வரதராசனார் பொருள்:
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

மணக்குடவர் பொருள்:
கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும் குடிகளைப் பாதுகாத்தலு மென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க்கெல்லாம் விளக்காம். கொடுத்தல்- தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை: குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங் கூறிற்று.

கலைஞர் பொருள்:
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலை யுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Kalvi Adhikaram-40 திருக்குறள் கல்வி அதிகாரம்-40 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil
Next articleThirukkural Oozh Adhikaram-38 திருக்குறள் ஊழ் அதிகாரம்-38 ஊழியல் அறத்துப்பால் Oozhiyal Arathupal in Tamil