Thirukkural Adakkam Udaimai Adhikaram-13 திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரம்-13 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil

0

Thirukkural Adakkam Udaimai Adhikaram-13 (Adakkam Udaimai) திருக்குறள் அடக்கமுடைமை அதிகாரம்-13 இல்லறவியல் அறத்துப்பால் Thirukkural Adakkam Udaimai Adhikaram-13 Illaraviyal Arathupal in Tamil. திருக்குறள் அடக்கமுடைமை பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-13 இல்லறவியல் அறத்துப்பால். அடக்கமுடைமை Adakkam Udaimai Thirukkural by Thiruvalluvar. Thirukkural Adakkam Udaimai Chapter-13 | அடக்கம் உடைமை அதிகாரம் 13.

Thirukkural Adakkam Udaimai Adhikaram-13

Thirukkural Adakkam Udaimai Adhikaram-13

திருக்குறள் பா: 121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

kural 121: atakkam amararul uykkum atangaamai aarirul uyththu vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

மணக்குடவர் பொருள்:
மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

கலைஞர் பொருள்:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

திருக்குறள் பா: 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

kural 122: kaakka porulaa atakkaththai aakkam adhaninooung killai uyirkku

திரு மு.வரதராசனார் பொருள்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

மணக்குடவர் பொருள்: ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை.

கலைஞர் பொருள்:
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

திருக்குறள் பா: 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

kural 123: serivarindhu seermai payakkum arivarindhu aatrin atangap perin

திரு மு.வரதராசனார் பொருள்:
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

மணக்குடவர் பொருள்:
அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும். அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.

கலைஞர் பொருள்:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

சாலமன் பாப்பையா பொருள்:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

திருக்குறள் பா: 124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

kural 124: nilaiyin thiriyaadhu atangiyaan thotram malaiyinum maanap peridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

மணக்குடவர் பொருள்:
தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.

கலைஞர் பொருள்:
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

திருக்குறள் பா: 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

kural 125: ellaarkkum nandraam panidhal avarullum selvarkke selvam thakaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

மணக்குடவர் பொருள்:
அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்: அவரெல்லாரினுஞ் செல்வமுடை யார்க்கே மிகவும் நன்மை யுடைத்தாம். செல்வம் – மிகுதி.

கலைஞர் பொருள்:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

திருக்குறள் பா: 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
.

kural 126: orumaiyul aamaipol aindhatakkal aatrin ezhumaiyum emaap putaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது

மணக்குடவர் பொருள்:
ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

கலைஞர் பொருள்:
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் – அரணாக இருந்து உதவும்.

திருக்குறள் பா: 127
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

kural 127: yaakaavaa raayinum naakaakka kaavaakkaal sokaappar sollizhukkup pattu

திரு மு.வரதராசனார் பொருள்:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

மணக்குடவர் பொருள்:
எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.

கலைஞர் பொருள்:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

திருக்குறள் பா: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

kural 128: ondraanun theechchol porutpayan untaayin nandraakaa thaaki vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

மணக்குடவர் பொருள்:
ஒரு சொல்லேயாயினும் கேட்டார்க்கு இனிதாயிருந்து தீயசொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்மையாகாதாகியே விடும். இது சால மொழிகூறினாலுந் தீதாமென்றது.

கலைஞர் பொருள்:
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

திருக்குறள் பா: 129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

kural 129: theeyinaar suttapun ullaarum aaraadhe naavinaar sutta vatu

திரு மு.வரதராசனார் பொருள்:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

மணக்குடவர் பொருள்:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறித் தீரும்: நாவினாற் சுட்ட புண் ஒருகாலத்தினுந் தீராது.

கலைஞர் பொருள்:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

திருக்குறள் பா: 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
.

kural 130: kadhangaaththuk katratangal aatruvaan sevvi arampaarkkum aatrin nuzhaindhu

திரு மு.வரதராசனார் பொருள்:
சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

மணக்குடவர் பொருள்:
வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.

கலைஞர் பொருள்:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Naduvu Nilamai Adhikaram-12 திருக்குறள் நடுவு நிலைமை அதிகாரம்-12 இல்லறவியல் அறத்துப்பால் Illaraviyal Arathupal in Tamil
Next articleஇந்த ராசிக்காரருக்கு ராஜயோகம் தானாம் ! இந்தவாரம் நீங்கள் கவனமாக இருங்கள் ! இந்த வார ராசிபலன் !