தலை கிடைக்காவிட்டால் சந்தியாவின் வழக்கு முடியாதா?- சட்ட நிபுணர் விளக்கம்!

0

தூத்துக்குடி பெண் சந்தியாவின் கொலை வழக்கு வித்தியாசமானது. இந்த வழக்கில் உடலின் சில பாகங்கள் கிடைத்துள்ளது. தலை கிடைக்காவிட்டால் வழக்கு முடியாதா? இதில் உள்ள சட்டச்சிக்கல் குறித்து சட்ட நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி பெண் சந்தியாவின் வழக்கு வித்தியாசமானது. அவரது உடல் பாகங்கள் கிடைத்தாலும் தலை கிடைக்காததால் வழக்கை முடிக்க முடியாது. முதலில் கணவர் கொலை செய்ததாக போலீஸார் சொல்கிறார்கள், நான் கொலை செய்யவில்லை என கணவர் சொல்கிறார்.

வழக்கில் உள்ள சந்தேகங்களை, போலீஸார் எப்படி வழக்கு விசாரணையை கொண்டுச் செல்வார்கள் என்பதுப்பற்றி சட்ட நிபுணர் ரமேஷ் நடராஜனிடம் இந்து தமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

சந்தியா கொலை வழக்கில் தலை இன்னும் கிடைக்கவில்லை, இதனால் வழக்கை முடிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

கண்டிப்பாக வழக்கை முடிக்க முடியும். சிக்கல் ஏற்படாது. மற்ற உடல் பாகங்களில் கை கால் கிடைத்து விட்டது. தலை கிடைக்காமல் போகலாம், ஒருவேளை அழித்திருக்கலாம். உடலை அடையாளம் கண்டுபிடித்து விட்டார்கள்.

டிஎன்ஏ டெஸ்டுக்கு பரிந்துரைத்து விட்டார்கள். சந்தியாவுக்கு அப்பா, அம்மா, சகோதரிகள் உள்ளனர். அப்பா அம்மாவிடம் டிஎன்ஏ சோதனை நடத்தினாலே அதன் முடிவு அவர்தான் சந்தியா என வந்துவிடும். ஆகவே தலைக்காக காத்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உடல் பாகங்கள் கிடைத்து, டிஎன்ஏ சோதனை முடிந்து விட்டாலே நிரூபணமாகிவிடும். ஆகவே தலை கிடைக்கவில்லை என்பதற்காக வழக்கு நிற்காது. இன்னார் இறந்துவிட்டார் என்று நிரூபித்தாலே போதும்.

உடல் பாகம் கிடைத்து சந்தியா என உறுதியானாலும் எப்படி கொல்லப்பட்டார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்?

அது அடுத்தகட்ட விசாரணையில் வெளிவரும். இப்போதுதான் உடல் பாகங்களை எடுத்துள்ளார்கள். அந்த நபர் கொலை செய்து உடல் பாகங்களை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்துள்ளார். ஆகவே போஸ்ட் மார்ட்டத்தில் ஏதாவது சாம்பிள் கிடைத்து அதன்மூலம் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா? மயக்க மருந்து கொடுத்து அறுத்தாரா? என்பதெல்லாம் வெளிவரும்.

இதில் வீட்டைச் சுத்தமாகக் கழுவி தடயத்தை அழித்திருக்கிறார். நிறைய நாட்கள் ஆகிவிட்டன. மற்ற தடயங்களையும் பார்க்கவேண்டும். இருந்தாலும் சோதனையில் எதுவும் சிக்காமல் போகாது.

சந்தர்ப்ப சாட்சியம் இல்லாமல் கணவர்தான் கொலை செய்தார் என்பது எப்படி நிரூபிக்க முடியும்?

இதுபோன்ற விஷயங்களில் நிறைய தியரி இருக்கிறது. லாஸ்ட் விஷன் தியரி என்பார்கள். (Last vision theory) A,B என்கிற இரண்டு நபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அப்படி என்றால், கடைசியாக உடனிருந்த மற்றொருவருக்குத்தான் பொறுப்பு உள்ளது.

இரண்டு பேர் ஒரு காட்டுக்குள் போகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றாக ஒரு இடத்தில் இருக்கிறார்கள். அப்போது ஒருவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். மற்றொருவர் வெளியே வந்துவிடுகிறார் என்றால் அவர்தான் அதற்கு முதல் பொறுப்பாவார். எப்படி இறந்தார் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு மற்றொருவருக்கு உண்டு.

போலீஸ் அவரைக் கொலையாளி என்று சொன்னாலும், நான் கொலை செய்யவில்லை என பாலகிருஷ்ணன் சொல்கிறார். எப்படி நிரூபிப்பார்கள்?

வா சேர்ந்து வாழலாம் என்று இவர் போன் செய்து அழைத்ததாகச் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆமாம் சந்தியா இரண்டு நாள் அங்கு தங்கியிருந்தார் என்று கூறியுள்ளனர். இதெல்லாம் விசாரணையில் வெளிவரும். சிலர் தாமாக இதற்குப் பின் வந்து சாட்சி சொல்வார்கள்.

டைவர்ஸ் அப்ளை செய்துள்ளோம். அப்புறம் எப்படி அவர் என்னுடன் இருந்தார் என்று சொல்ல முடியும் என பாலகிருஷ்ணன் கூறியதாகச் சொல்கிறார்களே?

அப்படிச் சொல்ல முடியாது. டைவர்ஸ் அப்ளை செய்தாலும் பிளஸ் 2 படிக்கிற குழந்தைகள் உள்ளன. ஆகையால் சேர்ந்து வாழ நினைத்திருக்கலாம். எத்தனையோ வழக்கில் டைவர்ஸ் வரைக்கும் சென்றவர்கள் மனம் மாறி சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதுபோன்று இவர் அழைத்ததால் சந்தியா சென்றிருக்கலாம்.

இவர் மறுப்பதை எப்படி போலீஸார் நிரூபிப்பார்கள்?

இன்றைய நாள் வரை இறந்தது யார் என்பது குறித்த விசாரணையில் போலீஸார் இருந்தார்கள். கொல்லப்பட்டது யார் என்பது நிரூபணமாகிவிட்டது. இனி அடுத்தகட்ட விசாரணை ஆரம்பமாகும். அதில் பல விஷயங்கள் வரும்.

சந்தியாவின் மொபைல் இருந்தால் மொபைல் எங்கெங்கே டிராவல் ஆனது, யார் யாரிடம் பேசினார், கடைசியாக எந்த இடத்தில் இருந்தார் என டவர் லொக்கேஷன் எடுப்பார்கள். கணவர் பாலகிருஷ்ணன் யார் யாருடன் பேசினார், இவரும் சந்தியாவும் என்னென்ன பேசினார்கள், இருவரும் ஒன்றாக இருந்தார்களா? என்கிற பல விஷயங்களையும் எடுக்க முடியும்.

இன்றுள்ள டிஜிட்டல் யுகத்தில் போலீஸுக்கு பல வசதிகள் உள்ளன. ஆகவே எளிதாக பல விஷயங்களை எடுப்பார்கள். சந்தியா ஊரிலிருந்து எப்போது கிளம்பி வந்தார், எங்கெங்கே டிராவல் செய்தார், கால் ரெக்கார்ட்ஸ் எடுப்பார்கள். அதனால் அனைத்து விவரங்களும் வெளிவரும். இவர் வேறு யாருடைய உதவியை நாடி இருந்தாலும் அனைத்தும் வெளிவரும்.

அனைத்துக்கும் மேலாக மோடிவ் ஒன்று உண்டு. அதைத்தான் போலீஸ் பார்ப்பார்கள். கணவருக்குச் சந்தேகம் இருந்துள்ளது. நான்கு முறை சந்தியாவை மொட்டை அடிக்க வைத்துள்ளார் என்கிற விவரமும் சாட்சியங்களும் போலீஸ் முன் உள்ளன.

இப்போதுதான் விசாரணையின் ஆரம்ப கட்டம். இன்னும் அவர்கள் விசாரணை நடத்தி இப்படித்தான் என்று நிரூபிக்க நிறைய நேரம் உள்ளது. அதனால் போலீஸ் அதை நோக்கிப் பயணம் செய்வார்கள். இன்றுள்ள விஞ்ஞான வளர்ச்சி அபரிமிதமானது. 30, 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இல்லை. ஆகவே விசாரணையில் பல தடயங்கள் போலீஸுக்கு கிடைக்கும். ஆகவே தலை கிடைக்கவில்லை என்பதால் வழக்கு நிற்காது.

ஒருத்தர் கை, கால் , உடல் கிடைத்துவிட்டது. தலை கிடைக்கவில்லை. இவை இல்லாமல் தலை மட்டும் தனியாக உயிர் வாழப்போவதில்லை. ஆகவே அவர் கொல்லப்பட்டுவிட்டார். அவர் யார் என்பதும் தெரிந்துவிட்டது.

இனி இவர் எப்படி கொல்லப்பட்டார், பாலகிருஷ்ணன் எப்படிக் கொன்றார், இவர்தான் கொன்றாரா? என்பதுதான் போலீஸ் முன் உள்ள பிரச்சினை.

அப்படியானால் கணவர் ஏன் திடீரென பல்டி அடிக்கிறார்?

யாராக இருந்தாலும் முதலில் குற்ற உணர்ச்சியில் நான்தான் கொன்றேன் என்று ஒப்புக்கொள்வார்கள்.அதன் பின்னர் ரிமாண்ட் என்று போகும்போது வழக்கை எதிர்கொள்வதற்காக சிலர் ஆலோசனையின் பேரில்கூட அவர் மறுக்கலாம். அவர் குற்றவாளி என்று சொல்லவில்லை, குற்றவாளி இல்லை என்றும் சொல்லவில்லை. ஆனால் இது நடைமுறை என்பதை சொல்ல வருகிறேன்.

இதற்கு முன்னர் தலை கிடைக்கவில்லை என்றால் வழக்கை முடிக்க முடியாது என்கிறார்களே?

அதற்குக் காரணம் அப்போது உள்ள நிலையில் தலை கிடைக்காததால் அடையாளம் காண முடியாது என்பதற்காகச் சொல்வார்கள். இதற்கு முன்னர் பிளட் குரூப் வைத்து ஒரு அனுமானத்தில்தான் சொல்வார்கள். அப்பா, அம்மா பிளட் குரூப் பையனுக்கும் அப்படியே பொருந்தும் என்கிற அனுமானத்தில் செய்தார்கள்.

டிஎன்ஏ அதன் பின்னர்தான் வந்தது. இப்போது அதைத்தாண்டி அட்வான்ஸ் டெக்னாலஜி வந்துவிட்டது. டிஎன்ஏ டெஸ்ட் துல்லியமானது. தலை முக்கியம் என்று எதற்குச் சொல்கிறோம் என்றால் இன்னார் என்பதை சொல்வதற்காக தலையைக் கேட்கிறோம். ஆனால், டிஎன்ஏ டெஸ்ட் 100 சதவிகிதம் அதை நிரூபித்துவிடும். ஆகவே தலை கிடைக்காவிட்டாலும் வழக்கு நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாலகிருஷ்ணனை சிக்க வைத்த சந்தியாவின் ‘டாட்டூ’ புகைப்படம்!
Next articleசந்தியா கொலை போன்று உடல் துண்டாக்கப்பட்டு துப்பு துலங்கிய கொலை வழக்குகள்: 1- 1950களில் ஆட்டிப் படைத்த ஆளவந்தார் கொலை வழக்கு!