‘சாரி சார் கோபத்தில் கொன்னுட்டேன்’ போலீஸாருக்கு போக்கு காட்டிய பாலகிருஷ்ணன் சிக்கிய சுவாரஸ்யம்!

0

தூத்துக்குடி பெண் சந்தியாவின் தலை மற்றும் கையை போலீஸார் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் குப்பைத்தொட்டியில் தேடி வருகின்றனர். சந்தியாவை தெரியாமல் கொலை செய்து விட்டேன் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரின் ஒரு கை, இரண்டு கால்கள் மட்டும் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குப்பையில் இளம்பெண்ணின் கை, கால்கள் மட்டுமே பார்சல் செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளம்பெண்ணைக் கொலை செய்து கை, கால்களை மட்டும் வெட்டி கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசப்பட்டிருந்தது.

பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்சல் செய்யப்பட்ட கை, கால்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் வந்த லாரி குறித்து விசாரணை நடத்தியதில் அது கோடம்பாக்கம் பவர் ஹவுசிலிருந்து குப்பையை ஏற்றிவந்தது தெரியவந்தது.

30-லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது. டாட்டூவை வைத்துப் பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதினர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதினர்.

கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் இளம்பெண்ணின் உடல் எங்கே என போலீஸார் தேடினர். இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் தூத்துக்குடி டுவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த சந்தியா என்பவர் காணாமல் போனது தெரியவந்தது.

அவரது உறவினர்கள் கை, கால்களைப் பார்த்து அது தூத்துக்குடியில் கடந்த பொங்கலன்று சென்னை சென்ற பின் காணாமல்போன சந்தியா என தெரியவந்தது. சந்தியாவின் கணவர் சினிமா இயக்குநரான பாலகிருஷ்ணன் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தியதில் அவர் சிக்கினார்.

போலீஸ் விசாரணை போக்கு காட்டிய பாலகிருஷ்ணன் சிக்கிய சுவாரஸ்யம்:

சந்தியாவின் கைகால்கள் புகைப்படத்தை போலீஸார் தமிழகம் முழுதும் ஊடகங்களில் வெளியிட, போலீஸார் அறிவிப்பைப் பார்த்த ஒருவர் இதுபோன்ற டாட்டு ட்வின்புரத்தில் வசிக்கும் பெண்ணின் கையில் பார்த்துள்ளேன் என்று தூத்துக்குடி ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளிக்கரணை ஆய்வாளரை தொடர்புக்கொண்ட தூத்துக்குடி ஆய்வாளர் அதுகுறித்து கூற உடனடியாக தூத்துக்குடி விரைந்துள்ளனர். தூத்துக்குடியில் டுவின்புரத்தில் சந்தியா வீட்டுக்கு சென்று கேட்டபோது அவர் சென்னை சென்றுள்ளதாக போலீஸாரிடம் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

சென்னையில் எங்கே தங்கியுள்ளார் என்று கேட்டபோது பதிலில்லை. ஆனால் அவரது கணவரும் சென்னையில்தான் உள்ளார் என ஜாபர்கான்பேட்டை விலாசத்தை கொடுத்துள்ளனர். ஜாபர்கான்பேட்டை வந்த போலீஸார் அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சாமர்த்தியமாக நழுவிய பாலகிருஷ்ணன்:

பாலகிருஷ்ணனிடன் உங்கள் மனைவி எங்கே என போலீஸார் கேட்க தெரியவில்லை சார், தூத்துக்குடியில் இருப்பார், எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை. டைவர்ஸ் அப்ளை செய்துள்ளோம் என்று கூறிய அவர் ஏதாவது பிரச்சினையா சார் என கேட்டுள்ளார்.

குப்பைக்கிடங்கில் கை, இரண்டு கால்கள் மட்டும் கிடைத்துள்ளது. அதில் இந்தப்பச்சை குத்தப்பட்டுள்ளது, அது உங்கள் மனைவியினுடையதா என போலீஸார் காட்டியுள்ளனர். முகத்தில் கொஞ்சம்கூட அதிர்ச்சியை காட்டாமல் என் மனைவி பச்சை குத்தியதில்லை இது என் மனைவியின் கை இல்லை என கூறியுள்ளார் பாலகிருஷ்ணன்.

அப்படியானால் சந்தியா எங்கேத்தான் சென்றார் என போலீஸார் குழப்பமடைந்துள்ளனர். சந்தியாவின் போனுக்கு தொடர்புக்கொண்டபோது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் குழப்பமடைந்த போலீஸார் சந்தியாவின் பெற்றோர் குறித்து பாலகிருஷ்ணனிடம் கேட்க அவர்கள் நாகர்கோவிலில் உள்ளதாக விலாசத்தை கொடுத்துள்ளார்.

புலன் விசாரணையில் திருப்பம் கொடுத்த தாயார்:

நாகர்கோவில் சென்ற போலீஸாருக்கு ஒருவிஷயம் உறுதியானது. டாட்டு சந்தியா கையில் உள்ள டாட்டுதான் என்பதும் உடல்பாகங்கள் சந்தியாவினுடையது என உறுதியானது. ஆனால் சந்தியாவின் தாயார் நவம்பர் மாதம் சந்தியாவை கடைசியாக பார்த்தேன் அதன் பின்னர் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 20-ம் தேதி தனது மருமகன் பாலகிருஷ்ணன் தங்களுக்கு போன் செய்து சந்தியாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்போவதாக கூறியதாக தெரிவித்துள்ளார். இது போலீஸாருக்கு இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாராட்டத்தக்க புலன் விசாரணை:

தங்கள் விசாரணையில் பாலகிருஷ்ணன் இதைக்கூறவில்லையே, 20-ம் தேதி ஏன் திடீரென போன் செய்து கூறவேண்டும் என முடிவு செய்த அவர்கள் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளனர். சந்தியாவின் கால் டீடெய்லை போலீஸார் எடுத்தப்போது அதில் 14 தேதிகளில் பாலகிருஷ்ணனிடம் பேசியது தெரியவந்தது.

இதற்குப்பின்னர் சந்தியாவை கொன்றது பாலகிருஷ்ணந்தான் எங்கேயோ ஒரு இடத்தில் தொடர்பு நூல் விட்டுபோயுள்ளது அதை பிடிக்கவேண்டும் என முடிவு செய்துக்கொண்ட போலீஸார், சந்தியாவின் போன் நம்பரை வைத்து அவரது மெயில் ஐடியை எடுத்து கூகுள் கிளவுடில் அவரது புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தில் சந்தியா கையில் டாட்டு போட்டு அதை புகைப்படமாக எடுத்து வைத்துள்ளது போலீஸாருக்கு கிடைத்துள்ளது. இதற்கு பின்னர் என்ன வேண்டும்? டாட்டு போடவில்லை என மறைத்தது, சந்தியாவை பார்க்கவே இல்லை என மறைத்தது, ஜன.20 அன்று சந்தியாவின் பெற்றோருக்கு திடீரென போன் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன் என சொன்னது அனைத்தையும் கூட்டி கழித்துப் பார்த்த போலீஸாருக்கு தெளிவாக விஷயம் விளங்கியது.

பாலகிருஷ்ணனிடம் தப்பு உள்ளது எதையோ மறைக்கிறார் என தெரியவந்தவுடன், பாலகிருஷ்ணனை அழைத்த போலீஸார் சந்தியாவின் படங்களை காட்டியவுடன் அவர் முகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, அடுத்து டாட்டு போட்ட படத்தை காட்டி டாட்டுவே போடவில்லை என்று சொன்னீர்களே என்று கேட்டவுடன் அடுத்த அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.

பிரிந்து வாழும் நீங்கள், டைவர்ஸுக்கு அப்ளை செய்த நீங்கள் சந்தியாவை வெளிநாட்டுக்கு அனுப்புகிறேன் என அவரது பெற்றோருக்கு ஏன் போன் செய்தீர்கள், அந்த தகவலை எங்களிடம் ஏன் சொல்லவில்லை என கேட்டுள்ளனர். சொல்ல தோன்றவில்லை சார் என பாலகிருஷ்ணன் மழுப்பியுள்ளார்.

கடைசியாக போலீஸார் அந்த அஸ்திரத்தை வீசியுள்ளனர். கால் லிஸ்ட் எடுத்ததில் சந்தியா உங்களிடம் ஜனவரி 15-ம் தேதி பேசியுள்ளார், அதன் பின்னர் அவர் உங்களுடன் இருந்துள்ளார் என தெரிய வருகிறது என்று கூறியவுடன் பாலகிருஷ்ணன் வசமாக சிக்கிக் கொண்டதை புரிந்துக்கொண்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டு சாரி சார் கோபத்தில் கொன்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் முகத்தில் எந்த வருத்தமோ, பயமோ இல்லை, புன் முறுவல் மட்டுமே இருந்துள்ளது.

கொன்றது ஏன்?

சந்தியாவின் நடத்தை தனக்குப் பிடிக்கவில்லை பலமுறை கண்டித்தும் அவர் தனிக்காலில் நிற்பதால் என்னை தூக்கி எறிந்து பேசினார். இதனால் பிரிய நினைத்தோம் ஆனாலும் என் ஆத்திரம் அடங்கவில்லை. சந்தியாவின் நடவடிக்கைகளை கவனித்து வந்தேன்.

சந்தியாவின்மேல் நாளுக்கு நாள் அதிகரித்த கோபம் அவரை கொன்றுவிட்டு மறைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. பல முறை முயன்றும் சநதர்ப்பம் கிடைக்கவில்லை. அப்போதுதான் கடந்த ஜனவரி மாதம் சந்தியா சென்னையில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை தொடர்புக் கொண்டேன் சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது உன்னைப்பற்றி சொல்லியிருக்கிறேன் என பேசி நான் தங்கியுள்ள வீட்டுக்கு வரவழைத்தேன். பொங்கலுக்கு மறுநாள் வந்தவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது போல் பேசி ஆசைக்காட்டினேன். ஆனால் அவர் அதற்கு ஒத்து வரவில்லை.

மீண்டும் சண்டை வந்தது. பின்னர் சமாதானப்படுத்தினேன். பின்னர் 19-ம் தேதி இரவு மது அருந்தினேன், அப்போது மீண்டும் சந்தியாவிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னரே திட்டமிட்டப்படி மறைத்து வைத்திருந்த சுத்தியலால் சந்தியாவை தாக்கி கொன்றேன்.

அப்போதுதான் எனது சினிமா மூளை வேலை செய்தது. கொலை செய்யப்பட்ட சந்தியாவுக்கும் எனக்கும் பகை இருக்கிறது. நான் அவளை சந்திக்கவில்லை, கொன்றதும் யாருக்கும் தெரியாது. உடலை எங்காவது மறைத்துவிட்டால் யார் வந்து கேட்டாலும் தனக்கு தெரியாது என்று சொல்லிவிடலாம் என முடிவு செய்தேன்.

மறுநாள் வரை இந்த யோசனையிலேயே சென்றது. அதற்கு மேலும் வைத்திருந்தால் உடல் அழுகி வெளியே தெரிந்து விடும் என்பதால் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசிவிட்டால் யாருக்கும் தெரியாது என முடிவு செய்தேன்.

இரவோடு இரவாக மது அருந்திவிட்டு அவரது உடலை மரம் அறுக்கும் ரம்பத்தால் அறுத்தேன் பின்னர் தலை ஒரு கையை ஒரு பாலித்தின் பையிலும், இடுப்பு மற்ற பாகங்களை ஒரு பாலித்தின் பையிலும், ஒரு கை இரண்டு கால்களை ஒரு பையிலும் போட்டு மூன்று பைகளையும் மூன்று இடத்தில் போட்டேன்.

தலை, ஒரு கையை ஜாபர்கான் பேட்டையிலேயே ஒரு குப்பைத்தொட்டியிலும், கை, இரண்டு கால்களை கோடம்பாக்கம் அருகே ஒரு குப்பைத்தொட்டியிலும்( இதுதான் சிக்கியது) உடல் பாகங்களை ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு ஆற்றிலும் வீசி விட்டதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் அவரை கைது செய்த போலீஸார் அடையாறு ஆற்றில் உடல் பாகங்களை நேற்று மீட்டனர். இன்று அவரது தலையை தேடும் பணியை பெருங்குடி குப்பைகிடங்கில் போலீஸார் துவக்கியுள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் ஜன. 20,21,22 தேதிகளில் கொட்டப்பட்ட குப்பைகள் உள்ள இடத்தை கிளறி தேடி வருகின்றனர்.

பல நூறு டன் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் சந்தியாவின் தலையும், கையும் கிடைப்பது சற்று சிரமமான காரியம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்பலமானது யாழ். மாநகர சபையின் இலட்சக்கணக்கான ஊழல்?
Next articleபாலகிருஷ்ணனை சிக்க வைத்த சந்தியாவின் ‘டாட்டூ’ புகைப்படம்!