ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியால் குருபகவான் வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை எப்படியான பலன்களை கொடுக்கப்போகிறார்!

0

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு நடக்கவிருக்கும் குருப்பெயர்ச்சியால் குருபகவான் வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை எப்படியான பலன்களை கொடுக்கப்போகிறார்!

ரிஷபம் ராசி கிருத்திகை 2,3,4‍ ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்.

குருப்பெயர்ச்சி ரிஷபம்

அனைவரிடமும் இனிமையாகப் பழகும் சுபாவமும், கம்பீரமான தோற்றமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஆண்டுக் கோளான குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் திருக்கணித வரும் 20-11-2021 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-04-2022 வரை) சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோகத்தில் சற்று இடையூறுகளை ஏற்படுத்தும் என்றாலும் உங்கள் ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான சனி 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சற்று சாதகமாக இருந்து எதையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும்.

பொதுவாக 10-ல் குரு நின்றால் பதவியும் பாழ் என்பது பழமொழி. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பிறர் வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டி வரும் என்றாலும் அதற்கேற்ற சன்மானம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். வேலையாட்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து சென்றால் வலமான பலனை அடைய முடியும். குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6-ஆம் வீடுகளை பார்வை செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தேவைக்கு ஏற்ற வகையில் பண வரவுகள், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் யோகம், அசையும் அசையா சொத்துகளால் அனுகூலம், எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும். சிலருக்கு வெளியூர் செல்லும் யோகமும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். பெற்றோர் வழியில் ஒரு சில உதவிகள் கிடைத்து உங்களது வாழ்க்கை தரம் உயரும்.

உங்கள் ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது, முன்கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் என்பதால் சற்று விட்டுக் கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெற முடியும்.

தேக ஆரோக்கியம் எப்படி இருக்கும்:

சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொண்டால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றங்களை அடைய முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிக அலைச்சலால் உடல் அசதி ஏற்படும் என்றாலும் எதிலும் திறன்பட செயல்படும் வாய்ப்பு ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம் எப்படி இருக்கும்:

ஜென்ம ராசியில் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. முன்கோபத்தைக் குறைப்பது, முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது நல்லது. உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வளர்ச்சி மற்றும் அசையா சொத்து பராமரிப்பு செலவு காரணமாக உங்கள் சேமிப்பு குறையும்.

கொடுக்கல்- வாங்கல் எப்படி இருக்கும்:

தனகாரகன் குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலை நிலவும். பண விஷயத்தில் பிறருக்கு ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதையும் சமாளித்து வலமான பலனை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரிகளுக்கு எப்படி இருக்கும்:

குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி சாதகமாக சஞ்சரிப்பதால் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடையும் யோகம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து சென்றால் கடினமான நெருக்கடிகளையும் சமாளித்து முன்னேற முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எப்படி இருக்கும்:

உத்தியோக ரீதியாக எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் தாமதம் ஆகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டிய காலம் என்பதால் முடிந்த வரை பணியில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிபடுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு எப்படி இருக்கும்:

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் சுபகாரியத் தடைகள் ஏற்பட்டாலும் குரு பார்வை 2-ஆம் வீட்டிற்கு இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு எப்படி இருக்கும்:

உங்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எடுக்கும் காரியங்களில் தாமத நிலை ஏற்படும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய நேரிடும். மக்களின் ஆதரவும் பெரிய இடத்து நட்பும் சிறப்பாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும்.

விவசாயிகளுக்கு எப்படி இருக்கும்:

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபமும் குறைவாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும். பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற கடினமாக முயற்சிக்க வேண்டி இருக்கும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

படிப்பு எப்படி இருக்கும்:

கல்வியில் சற்று மந்தமான நிலை இருக்கும். ஞாபகமறதி ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடையே ஏற்படும் பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது. பயணங்களின் போது நிதானமுடனிருப்பதும், பேச்சில் சற்று கவனமுடனிருப்பதும் நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் 20-11-2021 முதல் 01-01-2022 வரை

குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது முன்கோபத்தை குறைப்பது நல்லது. சனி 9-ல் இருப்பதால் பண வரவுகள் சாதகமாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும். அசையும் அசையா சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் வேலையாட்களை அனுசரித்து சென்றால் லாபங்களை அடைய முடியும்.

குரு பகவான் சதய நட்சத்திரத்தில் 02-01-2022 முதல் 01-03-2022 வரை

குரு பகவான் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் ராகு நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் தருவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை சிறப்பாக அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பலவகையில் நற்பலன்களைப் பெற முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள்ளேயே இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலைப் பளு இருந்தாலும் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று நிதானமாக செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் நல்ல செய்தி கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 02-03-2022 முதல் 13-04-2022 வரை

குரு பகவான் தனது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நற்பலனை பெற முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்து பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் உறவினர்களின் ஆதரவையும் பெற முடியும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுத்தாமல், இருப்பதை வைத்தே பணத்தை புரட்டுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்துவிட முடியும். கூட்டாளிகளினாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சக ஊழியார்களை அனுசரித்து நடந்து கொண்டால் கடினமான வேலையை கூட சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் எடுக்க முடியும். வேலை தேடுபவர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

பரிகாரம்

ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10–ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5,6,8
நிறம் – வெண்மை, நீலம்,
கிழமை – வெள்ளி, சனி
கல் – வைரம்
திசை – தென்கிழக்கு,
தெய்வம் – விஷ்ணு, லக்ஷ்மி

12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி பலன்கள்! விரிவான பலன்கள்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாஸ்து சாஸ்திரத்தின் படி 12 ராசிகளுக்கும் எந்த திசையில் தலைவாசல் இருந்தால் அதிஷ்டமான வாழ்க்கை அமையும்!
Next articleஇன்றைய ராசி பலன் 13.11.2021 Today Rasi Palan 13-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!