பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் தொடர்பான பேச்சுவார்த்தை! வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு!
தற்போதைய வாழ்க்கை செலவுக்கு அமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 3,250 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாக இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதன விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்சங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருக்கு இடையே, இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இச் சந்திப்பின் போது, தொழிலாளர் சட்டம், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய நாளாந்த வேதனத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு வழி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறுகோரி, பெருந்தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு மீதான விசாரணைகள் 17 மாதங்கள் நீடித்திருந்த நிலையில், நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
அத்துடன், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.