புற்றுநோயைக் கண்டறியும் விலை குறைந்த எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு!

0
483

புற்றுநோய் செல்லின் டி.என்.ஏ. தங்கத்துடன் பிணைகிறது. இப்பண்பினால் புற்றுநோயைக் கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை ஒன்று உருவாக்கப்படமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. இந்த வார “நேச்சர் கம்யூனிகேஷன்” (Nature Communications) இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை அறிமுகப்படுத்தும் இந்த புதிய சோதனை முறை, புற்றுநோய் மருத்துவத்துறையில் நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.

இந்த மிக எளிய சோதனையைச் செய்ய ஆகும் செலவும் குறைவு, முடிவுகளும் 90% வரை உறுதியான முறையில் அமையும். விரைவில் பத்து நிமிடங்களுக்குள் சோதனையை செய்து முடித்துவிட முடியும். பயாப்சி போன்று நோயாளியின் உடலை ஊடுருவும் முறையும் இதில் கிடையாது. இரத்தப்பரிசோதனை (ஒரு சொட்டு அளவு இரத்தம்) மூலம் சிறிய அளவில் டி.என்.ஏ. மட்டுமே தேவைப்படுகிறது என்பது இந்தச் சோதனை முறையின் சிறப்பு. இந்தச் சோதனையால் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் கண்டறியமுடியும், ஆனால் எந்த வகைப் புற்றுநோய் என்பதை அறியக் கூடிய திறன் இச்சோதனைக்கு இல்லை.

இச்சோதனை டி.என்.ஏ. மெத்திலேஷன் (methylation) பண்பை அடிப்படையாகக் கொண்டது. டி.என்.ஏ மெத்திலேஷன் என்பது மெத்தில் குரூப் (methyl group) ஒன்று சைட்டோசைன் நியூக்ளியோட்டைடு (cytosine nucleotide) ஒன்றுடன் இணையும் மரபணு அளவில் நிகழும் ஒரு மாற்றம் என்பது சுருக்கமான அறிவியல் விளக்கம். இந்த மரபணு மாற்றங்களே உயிர்கள் எவ்வாறு இயங்கும், அந்த இயக்கத்தை மரபணுக்கள் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதன் அடிப்படையும் ஆகும்.

பெரும்பாலான புற்றுநோய் செல்களின் டி.என்.ஏ. ஒரு தனிப்பட்ட மெத்திலேஷன் பண்பைக் காட்டுகிறது. மெத்தில் சைட்டோசின் (methylcytosines) மூலக்கூறு அளவில் வேறுபடுகிறது. டி.என்.ஏ. வின் இந்த மின்வேதியியல் பண்பு மெதைல்ஸ்கேப் (Methylscape) என்று அறியப்படுகிறது. பரவலாக இன்றி செல்லின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மெத்தில் குரூப் குவிகிறது. இவ்வாறான மெதைல்ஸ்கேப் மாறுதல் நோயற்ற செல்லுக்கும் புற்றுநோய் செல்களுக்கும் வேறுபடுகிறது என்பது முன்னர் அறிந்தது அறிவியல் முடிவுதான். இப்பொழுது இந்த வேறுபடும் தன்மைதான் புற்றுநோய் செல்களைக் கண்டறியும் சோதனையில் எடுத்தாளப்பட்டுள்ளது. எந்தவகைப் புற்றுநோயாக இருந்தாலும் அவற்றின் மெதைல்ஸ்கேப் ஒரே தன்மையைத்தான் காட்டுகிறது. அதாவது, புற்றுநோய் அறிகுறியின் பயோமார்க்கர் (biomarker) குறியீடாக டி.என்.ஏ. வின் மெதைல்ஸ்கேப் பயோமார்க்கர் முறை பயன்படுகிறது.

டி.என்.ஏ. வின் மெத்தில் சைட்டோசின் தங்கத்துடன் சேரும் பண்பினைக் கொண்டுள்ளது. இப்பண்பை எலெக்ட்ரோ கெமிகல் மற்றும் கலோரிமெட்ரிக் (electrochemical and colorimetric technique) முறையில் கண்டறிய முடியும். நுண்ணோக்கி இன்றி வெறும் கண்ணால் திரவத்தில் ஏற்படும் நிறமாறுதல் மூலமே புற்றுநோய் உள்ளதா இல்லையா என்றும் முடிவு செய்ய முடியும். நீலவண்ணமாக மாறினால் புற்றுநோய் இல்லை, இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் புற்றுநோய் இருக்கிறது என்பது சோதனையின் முடிவு.

 ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட் பல்கலைக்கழக (AIBN – Australian Institute for Bioengineering and Nanotechnology, The University of Queensland) ஆய்வாளர்களின் புற்றுநோய் உள்ளதா என விரைவில் அறியமுடியும் இக்கண்டுபிடிப்பு அத்துறை ஆய்வாளர்களால் மிகவும் பாராட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர் குழுவில் இந்தியப் பின்புலம் கொண்ட டாக்டர். அபு சினா (Dr. Abu Sina) வும் பங்காற்றியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரு மாதம் வரை முடி கருப்பாக இருக்கும்! வீட்டிலேயே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி!
Next articleதூங்குவதற்கு முன் குளித்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா!