பிரித்தானியாவின் தலைநகரில் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்கள்!
பிரித்தானியாவின் தலைநகரில் 12 மணி நேரத்திற்குள் மூன்று கத்தி குத்து சம்பவத்தால் மூன்று பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் Hackney-யில் இருக்கும் ஷாப் அருகில் நேற்று பிற்பகல் சரியாக உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு மேல் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கும் மற்றொரு நபருக்கும் ஏற்பட்ட மோதலில் கத்தியால் தாக்கியதால் அந்த நபர் பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து அதே நாள் நள்ளிரவில் Knightsbridge-ன் Harrods department store அருகே அடையாளம் தெரியாத நபருடன் ஏற்பட்ட மோதலில் 20 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த இரு சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதே நாள் இரவில் மூன்றாவது சம்பவமாக தெற்கு லண்டனின் Greenwich-ல் இருக்கும் தெரு ஒன்றில் உள்ளூர் நேரப்படி மறுநாள் காலை 3 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கத்தி குத்து சம்பவத்தால் உயிரிழந்து கிடந்தார்.
ஆனால் மூன்றாவது நபர் யார்? அவரின் வயது என்ன? என்பது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த மூன்று சம்பவமும் 12 மணி நேரத்திற்குள் நடந்துள்ளதால், தலைநகர் லண்டனில் இந்தாண்டு(2019) மட்டும் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து பொலிசார் தெரிவிக்கையில், Hackney-யில் நடந்த சம்பவம் குறித்து 2 மணிக்கு தங்களுக்கு தகவல் வந்தது.
இதனால் பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் அங்கு விரைந்த போது, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தான். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளோம். இறந்து கிடந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் முழு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் கடந்த மாதம் இதே போன்று ஒரே இரவில் ஐந்து கத்தி குத்து சம்பவங்கள் நடந்தது நகரையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.