தமிழ் மாதங்கள் ஆவணி மாதம் 15 நாட்களும் புரட்டாசி மாதம் 15 நாட்களும் இணைந்த மாதம் செப்டம்பர் மாதம்.
செப்டம்பர் மாதத்தில் நான்கு முக்கிய கிரக பெயர்ச்சி நிகழ உள்ளது. இதன்படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படியான மாதமாக இருக்கும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்குச் செப்டம்பர் மாதத்தில் கலவையான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
குடும்பத்தில் நிலைமை சீராகும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் சிறப்பாக இருந்தாலும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகள், திட்டங்களை மேற்கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் நினைத்த லாபத்தையும், வருமானத்தையும் ஈட்ட முடியும். உங்களின் நிதிப் பிரச்னை தீரும்.
உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்து மேலதிகாரிகளிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள். சிலருக்கு தொழில், வேலை விஷயமாக இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிலருக்கு உடல் நல கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் எந்த ஒரு உடல் நல பிரச்னையையும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகவும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். உங்களின் உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய மாதம்.
இந்த மாதத்தில் உங்களின் நிதி நிலை சிறப்பாக இருந்தாலும், உங்களின் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் செலவுகளை திட்டமிட்டுச் செய்வது அவசியம். தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் ஏற்படும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்றாலும், உங்களின் புதிய திட்டங்கள், நம்பிக்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்
உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும், உங்களின் கண் சார்ந்த பிரச்னை, உடல் வலி, அசதி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே இந்த மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். அமைதி நிலைக்கும். எதிர்பார்த்த பொருளாதார நிலை, வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் பேச்சு, ஆலோசனையைக் கேட்டு நடப்பதால் நல்லது நடக்கும்.
உங்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். கடன் அடைக்கும் வழி ஏற்படும். இருப்பினும் எதிர்பாராத செலவுகள், வீண் செலவுகள் ஏற்படலாம். அதனால் செலவுகள் கவனம் செலுத்துவது அவசியம்.
ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வயிறு, ஜீரணம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதும், சுத்தமான உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
கடகம்
கடக ராசிக்கு பல விதத்தில் நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் நிதிநிலைமை முன்னேற்றம் ஏற்படும். அதே சமயம் அதிக செலவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அடையும்.
வாழ்க்கை துணையுடன் இணக்கமான சூழல் இருந்தாலும், பேச்சில் நிதானமும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். உடல் நலனில் சற்று கவனமாக இருக்கவும். மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
மாத இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்களும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். ஆன்மிகத்தில் நாட்டம் கொள்வதால் உங்கள் மன அமைதி அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த மாதத்தின் முதல் பாதி இனிமையானதாக இருந்தாலும், அடுத்த பாதியில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருந்தாலும், திருமணமான தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். அதனால் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்த்து மன நிம்மதியுடன் வாழலாம்.
குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கடன் வாங்குவதைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் இடைக்கு. லாபம் கிடைக்கும் என்றாலும், உங்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும் என்பதால், உங்கள் வேலையில் கவனமாகவும், திட்டமிட்டுச் செய்வது அவசியம். மனதில் பதற்றத்தைத் தவிர்த்துக் கொண்டு செயல்படுங்கள். தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். உங்கள் குடும்பத்திலும், வெளியிலும் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களுடன் நல்லுறவு பேணுவீர்கள்.
வேலை தேடுவோர், தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வோருக்கு நம்பிக்கை தரக்கூடிய மாதமாக இருக்கும். அதே சமயம் இந்த மாதம் கூடுதல் பணிச்சுமை இருக்கும் என்பதால் திட்டமிட்டு வேலை செய்வது நல்லது.
பணிச்சுமையால் கணவன் – மனைவி இடையே நேரம் செலவிட முடியாமல் சிறு கருத்து வேறுபாடு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும் என்பதால், ஆடம்பர, வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு கவனமாக இருக்கவும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளால் வேலை அதிகரிக்கலாம்.
தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதால் உங்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. வயிறு, செரிமானம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளவும்.
துலாம்
துலாம் ராசிக்கு சிறப்பான பல பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி, நிம்மதி ஏற்படும். குடும்பம் சார்ந்த சில முக்கிய பொறுப்புகள் செய்து முடிக்க வேண்டி இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்களின் பேச்சு, செயலில் நிதானம் தேவை.
உங்களின் செலவுகள் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைத்துக் கொண்டு சேமிப்பது அவசியம்.பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வெளிநாடு சார்ந்த வேலைதேடுவோர், வேலை செய்வோருக்கு மிக சிறப்பான யோகமான நிலை ஏற்படும்.
நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவு, செயலில் கவனமும், பொறுமையும் அவசியும். எதையும் ஆராய்ந்து செய்வது நல்லது. உங்களின் ஆரோக்கியத்தில் சிறியளவில் பிரச்னை வந்து நீங்கும். உடற்பயிற்சி செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு சற்று சவாலான பலன்கள் இந்த மாதம் பெறுவீர்கள். திருமணமானவர்கள் கணவன் – மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வதால், குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள் தவிர்க்கலாம். நிம்மதியை அனுபவிக்கலாம்.
இந்த மாதம் உங்களுக்கு நல்ல லாபமும், நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களின் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பது அவசியம். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று உங்கள் செயல்களை செய்வதால் வெற்றி ஏற்படும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்பதால், நீங்கள் வாங்கியிருக்கும் கடன் திருப்பி செலுத்த வாய்ப்புள்ளது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சினையால் செலவுகள் ஏற்படலாம். சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல், நேரத்திற்குச் சாப்பிடுவது நல்லது.
தனுசு
தனுசு ராசி நேயர்களே உங்களுக்கு இந்த மாதம் எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கணவன் – மனைவி இருவரும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக் கொடுத்து செல்வதால், அந்நியோன்னியம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். விழாக்கள், விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர். குடும்ப உறவில் ஒற்றுமை அதிகரிக்கும்.
உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். அந்த நிதியை சரியாக பயன்படுத்தவும். சேமிப்பில் அக்கறை செலுத்தவும். பல தொழில்களில் சரியான வகையில் முதலீடு செய்வது நல்லது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு, குடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். சரியான நேரத்தில், ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது அவசியம்.
மகரம்
மகர ராசிக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய மாதமாக இருக்கும். தம்பதிகளிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். உங்களின் இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவைப்படும்.
குடும்பத்தில் பெரியவர்களிடம் வீண் விவாதம் செய்ய வேண்டாம். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.
தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். இருப்பினும் அதைக் கடந்து சாதிப்பீர்கள். புதிய திட்டங்கள், முயற்சிகளில் ஈடுபடலாம், ஆனால் புதிய முதலீடு செய்வதில் மிகவும் கவனம் தேவை.
இளம் வயதினருக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் வயதானவர்களுக்கு உடல் அசதி, சோர்வு, மூட்டு வலி போன்ற பிரச்னைகள் தொல்லை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கு புதிய பதவி, பொறுப்பு, அதிகாரம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் அதற்கு கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, தெரிந்தவர்கள் மூலம் நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
சிலருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் சார்ந்த விரிவாக்கம் செய்ய விரும்புபவர்கள், வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
குடும்பத்தில் மன அமைதி பெற, குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். எந்த ஒரு இக்கட்டான சூழலையும் சிறப்பாக சமாளிப்பீர்கள்.
வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்னை ஏற்படும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது நல்லது
மீனம்
மீன ராசிக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு நல்ல வரன் அமையலாம். கணவன் – மனைவி இடையே நல்ல ஒரு புரிதல் இருக்கும்.
தொழில் செய்யக்கூடியவர்களுக்கு லாபம் சிறப்பாக இருந்தாலும், சில சிக்கல்களும் ஏற்படும். புதிய முதலீடுகள் செய்வதில் கூடுதல் கவனம் தேவை. சாதக பலன் பெற பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
உங்களின் இலக்கை அடைய சரியான திட்டமிடல் தேவை. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறியளவிலான உடல் நல பிரச்னை ஏற்பட்டு நீங்கும்.