சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழும் அற்புத மருத்துவம் கோவைக்காய்!

0

சர்க்கரை நோய்

கொடிகளில் காய்க்கும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளரும்தன்மை கொண்டது. இது மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டதாக வளரும். இதன் இலை, காய் பழம், வேர் போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் இருக்கிறது. இந்தியாவில் பழங்குடி மக்கள் அதிகமாக கோவைக்காயை மருத்துவத்தில் பயன்படுத்தியதாக ஆவணங்கள் கூறுகின்றன. இது சர்க்கரை நோய்க்கு மிக முக்கியமான மருந்தாக திகழ்கிறது.

ரத்தத்தில் சர்க்கரை

இதன் இலை, காயில் உள்ள குளுக்கோஸ் 6 பாஸ்பேட் என்ற என்சைம் கல்லீரலில் செயல்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை வாரம் இருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் இலை உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடியது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இலையை அரைத்து சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய் உள்ளவர்கள் பூசிக்குளிக்கலாம்.

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

சொரியாஸிஸ்

சொரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் இந்த இலையின் சாறை எடுத்து வெண்ணெய்யில் கலந்து பூசலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கோவை இலை சாற்றை உடலில் பூசும் வழக்கம் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. வாய்ப் புண், வயிற்றுப் புண்ணை போக்க, கோவைக்காய் இலை சாற்றை இரண்டு தேக்கரண்டி அளவு பருகவேண்டும். வயிற்றுப் போக்கு ஏற்படும்போது இதன் சாறை இரண்டு தேக்கரண்டி மோரில் கலந்து பருகவேண்டும். பூச்சிகடித்தால் அந்த இடத்தில் இந்த சாறை தேய்க்கலாம். உடலில் ஏற்படும் மூட்டு வீக்கம் மற்றும் அடிப்பட்ட வீக்கங்களுக்கு கோவை இலையை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டவேண்டும். வீக்கங்கள் குறைந்துவிடும். கோவைக்காயில் பீட்டாகரோட்டின் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

சுவாசக்குழாய் அடைப்பு

இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

வாய்ப்புண்

கோவைப்பழம் வாய்ப்புண்கள் மற்றும் பல் வலிக்கு நல்ல மருந்தாகும். பழத்தை மென்று வாய்கொப்பளித்தால் போதுமானது. கோவைக்காய் கொடியின் வேர் 20 கிராம் எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து குடித்தால் நீர்கட்டு நீங்கும். பித்தம் அதிகரிப்பதால் மூட்டுகளில் உண்டாகும் குத்தல் மற்றும் வீக்கத்திற்கும் இந்த நீரை பருகலாம். கோவைக்காய் அதிகம் கிடைக்கும் காலங்களில் அதை வெட்டி சிறிது உப்பு மஞ்சள் தூள் கலந்து அரை வேக்காடு வேக வைத்து வெயிலில் காய வைத்து வற்றலாக்கி தேவைக்கு பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு கோவைக்காய் சிறந்த மருத்துவ உணவு. அதனால் வாரத்தில் இரண்டு நாட்களாவது அதை உணவில் சேருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை!
Next articleசிறிய பிரச்சினைகளும்! முதலுதவியும்!