உடல் சோர்வு, அலுப்பு, பலவீனம், மயக்கம் தீர்த்து உடலுக்கு சக்தியை தரும் கோதுமை கஞ்சியின் மகத்துவம் !

0

அறிகுறிகள்: பலவீனம்.
உடல் சோர்வாக காணப்படுதல்.
மயக்கம்.

தேவையானவை: கோதுமை கஞ்சி

செய்முறை: கோதுமையை சுத்தம் செய்து கஞ்சி வைத்து மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும்.

இன்றைய அவசர உலகில், பெரும்பாலானோர் மனம் பிடிப்பில்லாமல், இறுக்கத்தோடு இயங்குவது அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு முக்கியக் காரணங்கள். `என்னமோ தெரியலை… காலையில எந்திரிக்கும்போதே சோர்வா இருக்குது; தசை எல்லாம் வலிக்குது; எலும்புக்குள்ளே குடையுது…’ என மருத்துவரிடம் வருத்தப்படும் பெண்களும் இருக்கிறார்கள். அலுவலகம் விட்டு வரும் கணவனிடம் கடைக்குப் போகச் சொன்னால், ‘முடியாது… நானே நொந்து நூடுல்ஸாகி வந்திருக்கேன். மனுஷனை வீட்லகூட நிம்மதியா இருக்கவிட மாட்டியா?’ என அலுத்துக்கொள்ளும் கணவர்களும் இருக்கிறார்கள். ஏன் இந்த அலுப்பும் சோர்வும்? இது என்ன நோய்? உடல் உளைச்சலா… மன உளைச்சலா?

உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையைப் பிடிப்புடனும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் நகர்த்திட மிக மிக அத்தியாவசியம். இவற்றைச் சிதைக்கும் அலுப்பு, சோர்வு ஆகியவை உடல் மற்றும் மனதின் நோய்களாகவும் இருக்கக்கூடும்.

எந்த இடையூறும் இல்லாத 7 – 8 மணி நேர இரவுத் தூக்கம் இருந்தால், காலை அலுப்பில்லாமல் உற்சாகமாக விடியும். அஜீரணக் கோளாறு, கால்சியம் மற்றும் உயிர்ச்சத்துக் குறைவால் இரவில் கெண்டைக்காலில் வரும் தசை வலி, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் காலை நேரத் தலைவலி, சர்க்கரைநோயால் இரவில் தூக்கத்தைக் கெடுத்து இரண்டு, மூன்று முறை பிரியும் சிறுநீர்… இவை காலை நேர அலுப்பைத் தருவதில் முக்கிய நோய்கள்.

இவை தவிர, ரத்தசோகை இருந்தாலோ, தைராய்டு சுரப்பு அளவுக்குக் குறைவாக இருந்தாலோ காலை நேரம் உற்சாகமாக இல்லாமல் அலுப்பு, சோர்வு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். மலச்சிக்கல் உடலையும் மனதையும் மந்தப்படுத்தும் முக்கியக் காரணி. அதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்காக சிகிச்சை எடுக்கும்போது, மருத்துவர் பரிந்துரைத்திருக்கும் உயிர்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட் மாத்திரைகளைச் சரிவரச் சாப்பிடாமல் இருப்பதும் உடல் சோர்வைத் தரும். சில மருந்துகள் ஜீரணத்தில் இடையூறு ஏற்படுத்துபவை. காய், கனிகளில் இருந்து சத்துக்களை உடல் பிரித்தெடுக்கும் தன்மையைத் தடுக்கக்கூடியவை. இதன் காரணமாக, நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உடல் சோர்வு அலுப்பு இரண்டும் இருந்துகொண்டே இருக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் முடியும் சமயத்தில் ஹார்மோன்கள் குறைவதால் ஒருவித எரிச்சல், படபடப்பு, பய உணர்வு, திடீரென்று வியர்த்துப் போதல் ஆகியவை நடப்பதும் அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு முக்கியக் காரணங்கள்.

அலுப்பு, சோர்வுக்கு உடல் நோய்க்கு இணையான உளவியல் காரணமும் உண்டு. சவால்கள் இல்லாத ஒரே வேலையைப் பல ஆண்டுகளாகச் செய்து வருவதில் ஏற்படும் சலிப்பு, செய்கிற வேலைக்குச் சின்னதாக ஒரு பாராட்டுதல்கூட கிடைக்காததால் ஏற்படும் அலுப்பு, ஈ.எம்.ஐ கட்டுவதற்காகவே பிடிக்காத பணியை போலிப் புன்னகையுடன் செய்வதால் ஏற்படும் சோர்வு… என பல உளவியல் காரணங்கள் அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு உண்டு.

கணவனுக்கு முத்தம் தருவதில் ஏற்படும் ஈகோ பிரச்னை, வளர்ந்த குழந்தைகளுடன் இருக்கும்போது தவிர்க்கப்படும். உடல் உறவுகள் என காதலும் காமமும் கட்டிப்போடப்படுவதாலும் வாழ்வில் அலுப்பும் சோர்வும் பெருகுகின்றன.

* எந்த உணவு உற்சாகம் தரும்… அலுப்பு, சோர்வு இரண்டையும் அடித்து விரட்டும்? அலுப்பு, சோர்வு தரும் நோய் ஏதாவது இருந்தால், குடும்ப மருத்துவரை அணுகி முதலில் அதற்கு முறையான சிகிச்சை பெறவேண்டியது அவசியம். அடுத்ததாக, இரவில் நன்கு ஜீரணிக்கக்கூடிய, நல்ல உறக்கத்தைத் தரக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டியது அவசியம். அதிலும், கனி வகைகள் உங்கள் முதல் தேர்வாக இருக்கட்டும். பழங்கள், இறைவன் நமக்களித்த கசக்காத வைட்டமின் மாத்திரைகள். குறிப்பாக, ஒரு நெல்லிக்கனி, காய்ந்த திராட்சை, உலர்ந்த அத்தி ஆகியவற்றை தினசரி காலை வேளையில் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். ஒரு வேளை உணவு (காலை அல்லது இரவு) முழுமையாகப் பழ உணவாக இருப்பது சிறப்பு.

* பழங்களில், பாலீஷ் செய்யப்பட்ட வெளிநாட்டு ஆப்பிளும் ஆரஞ்சும்தான் சத்தானது என நினைப்பது தவறு. அவற்றைக் காட்டிலும் பப்பாளி, வாழை, மாதுளை, சீதாப்பழம், அன்னாசி ஆகியவை சிறப்பானவை. 

* பித்த உடல்வாகு கொண்டவர்கள், தினமும் காலையில் இஞ்சி, இரவில் கடுக்காய் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதற்கும் உற்சாகம் தரும். 

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முருங்கைக்கீரை சூப், சர்க்கரை நோயாளிகள் ஆன்டிஆக்ஸிடன்ன்ட் நிறைந்த பால் கலக்காத கிரீன் டீ (Green Tea) என காலை பானமாக அருந்தலாம். 

* தினமும் 2 – 2 1/2 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம். 

* அதிகம் புளி உள்ள, ஜீரணத்துக்குச் சிரமம் கொடுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

இவையெல்லாம் இருந்தாலும்கூட தெளிந்த மனமும், அக்கறை, அன்பு, பாசம், காதல் என உறவின் வெளிப்பாடுகளும்தான் அலுப்பு, சோர்வை நீக்கும் முக்கிய மருந்துகள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரகசியம் உடைத்த நடிகை பூமிகா ! என்னுடைய இந்த உறுப்பை சிறியதாக்கி விடு என கடவுளிடம் வேண்டினேன் !
Next articleபுதிய‌ விந்து உற்பத்திக்கு கரும்புச்சாறு மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள். புதிய‌விந்து உற்பத்திக்கு கீழாநெல்லி மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.