இலங்கையின் உச்ச நீதிமன்றில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாக பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மோசடியான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர்.
எனினும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய காலஅவகாசம் கோரியதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையி்லான மூன்று நீதியரசர்கள் குழு, இன்று காலை 10 மணிவரை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகும்.
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் இந்த வழக்கு, ஒட்டுமொத்த இலங்கையை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது.
நீதிமன்றின் தீர்ப்பினை பொறுத்தே இலங்கையின் அரசியல் செயற்பாடுகள் அமையவுள்ளன. இந்நிலையில் நீதிமன்ற செயற்பாடுகளை கண்காணிக்க உலக நாடுகளின் ராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பெருமளவில் உயர் நீதிமன்றில் குவிந்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரியின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் உலக நாடுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன், பொருளாதார தடைகளை விதிப்பது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.