கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் விரிசலுக்கு இவை தான் காரணம்!

0

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் விரிசலுக்கு இவை தான் காரணம்!

கணவனும், மனைவியும் பல்லாண்டுகள் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே இணைகிறார்கள். ஆசை ஆசையாய் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வாழ்க்கையை அழகாக மாற்றும் கனவுகளோடு திருமண பந்தத்தில் நுழைபவர்களுக்கு, வாழ்க்கை ‘பெட் ஆஃப் ரோசஸ்’ ஆக மட்டும் இருப்பதில்லை. பல நேரங்களில் கணவன்-மனைவி நடுவில் ஏற்படும் விரிசலுக்கான காரணங்கள் இதோ…

1. யாரை யார் அடக்கி ஆள்வது என்கிற கேள்வி.

இந்தியாவை பொறுத்தவரை இந்த அடக்குமுறை என்பது பெரும்பாலும் கணவர்கள் கைகளில்தான் இருக்கிறது. அடுத்தவரை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை கொண்டவரின் வாழ்க்கையில் சமத்துவம் இருப்பதில்லை. இதனால் சந்தோஷமும் இருப்பதில்லை. அடக்கி ஆளப்படுகிறவரின் வலி ஒரு கட்டத்தில் அதிகமாகி, விவாகரத்து வரை போவதுண்டு. இதை எப்படி சரி செய்வது? கட்டுப்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே தீர்வு. அப்படி இருந்தாலே எல்லாம் தானாக நல்லபடியாக நடக்கும்.

2. பழிக்குப் பழி

துணையில் ஒருவர் இன்னொருவரைத் தாக்கினால், தான் அவரைத் திருப்பித் தாக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பது. தான் யார் எனக் காட்டும் உள்ளுணர்வுடன் நாட்களை நகர்த்துவது. இந்த இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.

3. மிரட்டல்

தம்பதியர் இருவருக்கும் சில விஷயங்களில் உடன்பாடில்லாத ஒருமித்த கருத்துகள் இல்லாத பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படிச் செய்வதில்லை. வாழ்க்கையை தவறான பாதை நோக்கிக் கொண்டு செல்வதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்ள வழிவகுக்கும்.

4. பயம்

திருமண உறவுகளில் ஏராளமான பயங்கள் இருக்கலாம். இருவரில் ஒருவர் வேண்டுமென்றே அதிகம் செலவு செய்வது, துணையின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் தன் சுயம் போய்விடுமோ என நினைப்பது என அந்த பயம் பல வகைகளில் வெளிப்படலாம். ஆரோக்கியமான திருமண உறவில் பரஸ்பரம் மரியாதை இருக்குமே தவிர, பயம் இருக்காது. நிதி, நிர்வாகம் உள்பட சகலத்திலும் ஒருவரின் கை ஓங்கி இருந்தால்தான் இந்த பயம் தலைதூக்கும்.

5. மதிப்பீடு

திருமண உறவில் இருவரும் சமம் என்பதை மறந்து எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தன்னையே முன்னிலைப்படுத்த நினைப்பதும், துணையின் பங்கீட்டை குறைத்து மதிப்பிடுவதும், தான் மட்டுமே அறிவானவர், அன்பானவர், பண்பானவர், அழகானவர் எனக் காட்ட முனைவதும்கூட இருவருக்கும் இடையிலான ஒரு போராட்டமே.

6. தனிமை

மேலே சொன்ன விஷயங்கள் இருவருக்குள்ளும் இருக்கிற பட்சத்தில் அவை குறித்த விவாதங்களிலும் சண்டைகளிலும் அதன் தொடர்ச்சியாக இருவரின் நெருக்கமும் பெருமளவில் குறையும். ஒருவித தனிமை உணர்வும் தலைதூக்கும். இந்த சிக்கலான பிரச்னையிலிருந்து மீள சில வழிகளை முயற்சி செய்யலாம்.

நம்பிக்கையை மறுபடி கட்டமைப்பது…பிரச்னைக்கு முன்பு இருவரும் எப்படி இருந்தீர்களோ… போகட்டும். இப்படியொரு மாபெரும் பிரச்னையை சந்தித்து, அதிலிருந்து மீள நினைப்பவர்கள், அதன் பிறகாவது ஒருவருக்கொருவர் வாழ்க்கையை ரகசியங்கள் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

என்னதான் பிரச்னையைச் சரிசெய்ய நினைத்தாலும், சரி செய்துவிட்டுப் புது வாழ்க்கையைத் தொடங்க முயற்சித்தாலும், தவறு செய்த துணையின் ஒவ்வொரு நடவடிக்கையும் கொஞ்ச நாளைக்கு சந்தேகத்தையே தரும். அதைத் தவிர்க்க முடியாது என்றாலும் மிக மிக ஜாக்கிரதையாகக் கையாளவேண்டும்.

தவறுக்கு மன்னிப்பு கேட்கிற பழக்கம் நம்மூர் கணவன் மனைவியிடம் ரொம்பவே குறைவு. மன்னிப்பு கேட்பதை மிகப் பெரிய மானக்கேடாக நினைப்பதால்தான் சின்ன பிரச்னைகூட பிரிவு வரை இட்டுச் செல்கிறது. தகாத உறவுக்குள் சிக்கி மீண்ட துணையானவர், தன் இணையிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டியது இந்த விஷயத்தில் மிக மிக முக்கியம். அப்படிக் கேட்கப்படுகிற மன்னிப்பு வெறும் வார்த்தை அளவில் வெளிப்படக் கூடாது. மனதின் ஆழத்திலிருந்து கேட்கப்பட வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண் கட்டியை நொடியில் குணப்படுத்த சில சிறந்த வழிமுறைகள்.
Next articleஆண்களுடன் பழகும்போது பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!