அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

0

என்னை தாக்க வந்தவர்களை துப்பாக்கியால் சுடும் படி எவ்விதமான கட்டளைகளையும் பிறப்பிக்கவில்லை.

எனது மெய்ப்பாதுகாலவர்கள், எனது பாதுகாப்பு மற்றும் தங்களின் சுய பாதுகாப்பு கருதியே துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர் என்னை கொலை செய்யும் நோக்கிலே குண்டர்கள் கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கனியவளங்கள் கூட்டுத் தாபனத்திற்குள் பிரவேசித்தனர் அவர்களின் நோக்கமும் நிறைவேறியது எனவும் தெரிவித்தார்.

ரேணுகா ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கனியவள கூட்டுத்தாபனத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு காணொளி இதன் போது காட்சிப்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி தெமட்டகொடையில் உள்ள கனிய வளங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களே இடம்பெறுகின்றது. கூட்டுத்தாபனத்திற்கு வெளியில் ஊடகங்களுக்கும், மக்களும் கருத்து வெளியிட்டவர்கள் முற்றும் முழுவதுமாக பொய்களை மாத்திரமே குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் கூட்டுத்தாபனத்தின் முதல் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் அவர்களின் கருத்துக்கள் பொய் என்பதை நிரூபித்துள்ளன. கண்காணிப்பு கெமராவில் காணப்பட்ட பதிவுகளை அடிப்படையாக வைத்து அவதானிக்கும் பட்சத்தில், 2018.10.28 ஆம் திகதி அதாவது சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 4.23 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்தின் ஆரம்ப கட்டிடத்தில் அமர்ந்துள்ளமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. அதன் பொழுது நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனகே அவ்விடத்திற்கு வருகை தந்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளார்.

பின்னர் அமைச்சரின் பாதுகாவலர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியமையினை தொடர்ந்து கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த சிலர் பாதுகாவலர்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்தினர்.

இதற்கு முன்னரே அமைச்சரை மெய்பாதுகாவலர்கள் பாதுகாப்பு அறைக்குள் அனுப்பி வைத்துள்ளமை பதிவுகளின் ஊடாக காணமுடிகின்றது. பின்னர் அவ்விடத்திற்குள் விரைந்த சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி பிரச்சினைகளை தீவிரப்படுத்தினர்.

இக்கூட்டத்திற்குள் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் பந்துல ருவன் குமார மற்றும் உப தலைவர் பிரேமநாத் கமகே போன்றோர் பிரச்சினைகளை தோற்றுவித்தனர்.

இதனை தொடர்ந்து அவ்விடத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து அமைச்சரது மெய்பாதுகாவலர்கள் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டமை கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிடுகையில்,

காணொளியில் உள்ள விடயமே கூட்டுத்தாபனத்திற்குள் இடம் பெற்றது, ஆனால் இவ்விடயத்தினை நகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ திகனனே திரிபுப்படுத்தியுள்ளார்.

நான் அமைச்சின் காரியாலயத்திற்குள் சென்று முக்கியமான ஆவணங்களை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவர் என்னிடம் வந்து தாங்கள் தான் தற்போது அமைச்சர் இல்லை என்று குறிப்பிட்டதாகவும் நான் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பொய்யான குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.

இப்பிரச்சினைகளுக்கு முழு பொறுப்பினையும் அவரே ஏற்க வேண்டும். ஒரு உயிர் வீணாக பலியானமையே இறுதியில் இடம்பெற்றது. எனது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.

ஒரு அமைச்சரது பாதுகாப்பில் உள்ள மெய்ப்பாதுகாப்பாளரின் கடமைகளையே எனது பாதுகாப்பு அதிகாரிகள் செய்தனர். இவ்விடயத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. என்னை கைது செய்யுமாறு ஒரு தரப்பினர் கடந்த வாரம் போராட்டங்களை மேற்கொண்டனர். அவர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது .

என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை சட்ட ரீதியில் நிவர்த்தி செய்துக்கொள்ளும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவ்விடயத்தினை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல போராட்டங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட ஜனநாயகம் இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என்றார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇணையதளத்தில் ஹாட்டான சீரியல் நடிகையின் ஒரு அந்த விசயத்தால் பற்றிய நெருப்பு!
Next articleதற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவது எப்படி!